Saturday 21 January 2012

மன அமைதி...!

முதுகிற்குப்பின் யார்தான் பேசவில்லை?எல்லோரும் நம்மைப் பற்றி சிறிதளவேனும் மனக் குறைவோடு குறிப்பிடவே செய்கிறார்கள்


நம் அன்பிற்குரியவர்கள்,மரியாதைக்குரியவர்கள்,நம்மை நம்பி வாழ்பவர்கள்,நம் தயவை நாடுபவர்கள் கூட இதற்கு விதி  விலக்காக இருக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி இரண்டாவது கருத்து இருக்கத்தான் செய்கிறது.சிலர் அதை நம் காதுக்கு எட்டும்படி பேசுகிறார்கள்:சிலர் அதை சாமர்த்தியமாகக் கடைசி வரை மறைத்தே வருகிறார்கள்.


இந்த உண்மையை நெஞ்சில் நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக ஏதும் பேசியதாகக் கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியோ,வருத்தமோ,கோபமோ வராது.நம்மைப்  பற்றி ஒருவர் மனக் குறையுடன் பேசியதாகக் கேள்விப்பட்டால்,அவருடன் சண்டை போடுவதற்குப் பதில் அவர் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் ஏற்கனவே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல்  ஏன் அப்படி நேர்ந்தது என்று மிக இயல்பாக விளக்கிக் கூறினால் அவர் சரணாகதி அடைய மாட்டாரா?


பல மனிதர்களுக்கு தீர்மானமான தெளிவான கருத்து இருப்பதில்லை. நேரத்திற்கு ஒன்றைப் பேசுவது,தோன்றியதைஎல்லாம் சொல்வது என்று வைத்திருக்கிறார்கள்.எனவே இவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வருந்தவோ,கவலைப்படுவதோ வேண்டியதில்லை.


முதுகிற்குப் பின்னால் பேசுவது என்பது மனிதனின் தலையாய பலவீனம்.இதற்குக் காரணம் இருக்கிறது.பாராட்டைத் தவிர முகத்திற்கு நேரே சொல்லப்படும் எந்தக் கருத்தையும் நாம் விரும்புவதில்லை.அப்புறம் முதுகிற்குப் பின்னால் பேசாமல் எப்படி இருப்பார்கள்?மனிதர்களால் மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.


இதில் இடைப்பட்டவர்கள் செய்யும் கெடுதலும் உண்டு.வேண்டுமென்றே வார்த்தைகளையும்,தொனியையும்,தோரணையையும் மாற்றி பெரிது படுத்தி விடுவார்கள்.


நம்மைப் பற்றிச் சொல்லப்படும் விசயங்களில் உள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ளவும் ,உண்மை யற்றவைகளைப் புறக்கணிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இதற்கெல்லாம் மன அமைதியை கெடுத்துக் கொள்ளக் கூடாது.--லேனா தமிழ்வாணன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...