Monday 5 November 2012

முடமாக்கும் கோழிகள்...!!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வாழ்க்கை எனும் பயணத்தில் தான் நமக்கு எத்தனை, எத்தனை கதாபாத்திரங்கள்???
எல்லாப் பாத்திரங்களையும் திறம்பட நடத்தும் பெண்களைக் கூட சறுக்கச் செய்யும் ஒரே பாத்திரம் மாமியார் என்றால் அது மிகையாகாது.. மாமியார் என்ற பதவியை அடைந்தவுடன் எங்கிருந்து தான் அதிகாரமும், கர்வமும் வருகிறதோ பல பெண்களுக்கு???? அப்பப்பா.. நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

என் உறவுகளின் மத்தியில் சமீப காலங்களில் அடுத்தடுத்து மாமியார் என்ற பெயரில் இருக்கும் பெண்களால் நடந்த குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்ட, வேதனையின் வெளிப்பாடே இந்த பதிவுக்கு காரணம்...தன் மகனுக்கு பார்த்து,பார்த்து திருமணத்தை பண்ணி வைத்து விட்டு, பின் அதில் எப்போது பார்த்தாலும் குறை கண்டு பிடிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது..??

இந்த உலகில் எல்லா பெண்களாலும் நல்ல அம்மாவாக இருக்க முடிகிறது...ஆனால் ஒரு சிலரால் தான் நல்ல மாமியாராக பெயர் எடுக்க முடிகிறது.. தன் பிள்ளைகள் செய்யும் பெரும் தவறுகளைக் கூட எளிதாக பொறுத்து கொள்ளும் ஒரு பெண்ணால், தன் வீட்டிற்கு வந்த பெண்ணின் சிறு தவறை கூட பொறுத்து கொள்ள முடியாதது ஆச்சரியமான ஒன்றே..

இங்கு அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி ஒரு உறவை பிடிக்கும் என்றால் அது தாய் என்ற உறவாகத் தான் இருக்க முடியும்.. அதற்காகவே பல ஆண்கள் தாயின் பேச்சை தட்டுவது இல்லை...இந்த ஒன்றை மட்டும் சாதகமாக எடுத்து கொண்டு நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பெண்கள் தான் எத்தனை பேர்..??
தன்னுடைய பெண் மட்டும் புகுந்த வீட்டில் நன்றாக வாழ வேண்டும்..அதுவும் மாமியார், மாமனார் என எந்த அதிகப்படி சுமை(?????)யும் இல்லாமல், தனி குடித்தனமாக ஜாலியாக அவளின் இஷ்டப்படி வாழ வேண்டும் என நினைக்கும் எத்தனை அம்மாக்கள் தன் ஆண் பிள்ளைக்கு பொறுப்பு வரட்டும் என தனி குடித்தனம் வைக்கின்றார்கள்..?? தான் பெற்ற பெண்ணுக்கு ஒரு நீதி, வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு ஒரு நீதி இவர்களின் ராஜ்ஜியத்தில்.

திருமணம் செய்யும் வரை தன் முந்தானையை பிடித்து வலய வரும் தன் மகனை அவ்வளவு எளிதாக விட்டு விட மனம் வருவதில்லை.. அதிலும் நல்லது கெட்டது தெரியாமல் தன் அம்மாவின் எல்லா வார்த்தைகளுக்கும் எதிர் வார்த்தை பேசாமல் ஆமாம் சாமி போடும் பிள்ளைகள் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம்....அவர்களுக்கு இந்த உலகமே தன் கையில் என்ற நினைப்பு வந்து விடுகிறது
அதிலும் திருமணம் ஆகி மூன்று, நான்கு வருடங்கள் ஆகியும் பிள்ளை இல்லாமல் இருந்து விட்டால் அவ்வளவு தான் .. ஏதோ அந்த பெண் செய்யக் கூடாத தப்பை செய்து விட்டதை போல ஜாடை மாடையாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எவ்வளவு பேச்சு க்கள் ??? 

மாமியார் தான் குழந்தைஇல்லாததை குத்தி காட்டி பேசுராங்கன்னா வீட்டிற்கு வரும் உறவினர்களும் வெந்த புண்ணில் அவர்கள் பங்குக்கு வேலை பாய்ச்சுவார்கள். "ஏன்மா.. மருமக சும்மா தான் இருக்கோ??" னு சொல்லிட்டு டீயைக் குடித்து விட்டு அவர்கள் வழியை பார்த்துக் கொண்டு அவர்கள் போய்விடுவார்கள். ஆனால் இங்க ஓய்ஞ்சு இருந்த சண்டை திரும்ப ஆரம்பம் ஆகிடும்.
உறவினர்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?? பிள்ளை இல்லாட்டி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக போறீங்களா?? இல்லை தானே?? அப்புறம் எதுக்கு கேள்வி?? உங்க மகள இப்படி கேட்டா உங்கள் மனது என்ன பாடு பாடும்?? புரிந்து கொள்ளுங்கள்.அடுத்தவர் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள். நமது ஒவ்வொரு செயலும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம்.
பெண்ணின் உணர்வுகளையும், வலிகளையும் ஆண்கள் புரிந்து கொள்ள வில்லை என்றால் கூட ஏற்று கொள்ளலாம் போல.. ஆனால் அனைத்து வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்த , உணர்கின்ற பெண்களே இதை புரிந்து கொள்ளாதது வேதனையான ஒன்றே..இங்கு அதிகம் பெண்களின் நுட்பமான உணர்வுகள் பாதிக்க படுவது ஆண்களை விட பெண்களாலே..எப்படி தான் ஏற்கனவே மனம் புண்பட்டிருக்கும் பெண்ணை நோகடிக்க மனம் வருதோ தெரியல..
இந்த குழந்தை இன்மை பிரச்சனையை காட்டி வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை தானும் ஒரு பெண் என்பதை மறந்து பையனிடம் இருந்து பிரிக்க நினைக்கும் மாமியார்கள் தான் எத்தனை பேர்..?? தன் மருமகளின் மீது உள்ள வெறுப்பால் பிரிக்க நினைக்கும் மாமியார்கள் அதனால் பாதிக்கப்படப்போவது தன் மகனின் வாழ்க்கையும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்..??

ஒருவரை அடித்து தான் முடமாக்க வேண்டும் என்பது இல்லை..மனதை குத்தி ரணமாக்கும் வார்த்தைகள் போதும் அவர்களை முடமாக்க...எத்தனை சகோதரிகள் இந்த மாதிரி பேச்சை தவிர்க்க வெளியில் வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கி இருக்கிறார்கள் தெரியுமா?? அவர்களின் சாபம் இப்படி செய்பவர்களை சும்மா விடாது... எந்தவொரு பரக்கத்தும் ஆண்டவனின் கருணை இல்லாமல் நமக்கு கிடைக்காது என்பதை ஏனோ இப்படி பேசுபவர்கள் மறந்து விடுகிறார்கள்..

"பாதிக்கப்பட்டவர்களின் பிராத்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடையும் இல்லை" என்று நம் மார்க்கம் கூறுகிறது. இறைவனை அஞ்சிக் கொள்வோம்..


நீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். --இப்னு அப்பாஸ்(ரலி)-- (புகாரி -2448.)
இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஆரம்பத்தில் சரியான புரிதல் இல்லாமல் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் போது(கண்டிப்பாக ஏற்படும்) அதை அழகான முறையில் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய பெரியவர்களே அதை ஊதி பெரிதாக்கி அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதை என்னவென்று சொல்வது????

இதே போல பல நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இப்போதெல்லாம் இறைவனிடம் வேண்டும் பொழுது, உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன். நீங்களும் அவ்வாறே துவா கேளுங்கள். நமக்கு அடுத்த தலைமுறையாவது இந்த பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கட்டும். அதற்கு நாம் முயற்சி எடுப்போம், ஏனெனில் இது நம் கையில் உள்ள விஷயம்.

வாழும் வாழ்க்கை ஒரு முறை தான் என்பதையும் அதை நல்ல முறையில் தானும் வாழ்ந்து, அடுத்தவர்களுக்கும் பாரம் இல்லாமல், முடிந்தால் தன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய்யும் மனநிலையை இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.

ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்(5:32)
உங்கள் சகோதரி 
ஆயுஷா பேகம். 

22 comments:

 1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக....

  மாஷா அல்லாஹ் நல்ல பதிவு சகோ...

  //உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன். நீங்களும் அவ்வாறே துவா கேளுங்கள்./// இறைவன் நாடினால் பிரார்த்திக்கிறேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,துஆக்கும் நன்றி சகோ..:)

   Delete
 2. நல்ல பதிவு... மாமியா, மருமகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் முக்கால்வாசி வெளி ஆட்களால் தான் தூண்டிவிடப்படுகிறது என்ற உண்மையை பொட்டில் அடித்தது போல் சொல்லி உள்ளீர்கள்.. நானே அது போன்று பல முறை பார்த்து உள்ளேன்... குட் வொர்க்...

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   நீங்கள் சொல்வது உண்மை தான்..குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துபவர்களின் பேச்சை கேட்காமல் இருந்தாலே, பல குடும்பங்கள் நல்லாயிருக்கும்..

   தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

  ///ஒருவரை அடித்து தான் முடமாக்க வேண்டும் என்பது இல்லை..மனதை குத்தி ரணமாக்கும் வார்த்தைகள் போதும் அவர்களை முடமாக்க///

  அடியை விட மனரீதியான தக்குதல் மிக பலம் வாய்ந்தவை சில நேரங்களில் மனபிறழ்வு எற்படவும் வாய்ப்பிருக்கிறது அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து இருக்கிறேன்.

  ///எத்தனை சகோதரிகள் இந்த மாதிரி பேச்சை தவிர்க்க வெளியில் வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கி இருக்கிறார்கள் தெரியுமா?? அவர்களின் சாபம் இப்படி செய்பவர்களை சும்மா விடாது...///

  இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் உண்மையிலேயே சும்மா விடாது பெண்னினத்தின் சமூக கோபத்தோடு வந்த அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்..

   //அடியை விட மனரீதியான தாக்குதல் மிக பலம் வாய்ந்தவை//

   சரியான வார்த்தைகள்..சொற்களின் பலம் அப்படி..

   //இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் உண்மையிலேயே சும்மா விடாது//

   உண்மை தான்.. ஒரு நல்ல பெண்ணை விரட்டி விட்டு, பின் பணத்திற்காக வேறு பெண்ணை கொண்டு வந்தவரின் இன்றைய கதி...ஒரு வாய் சோற்றிக்கு மருமகளின் பேச்சுக்களை கேட்க வேண்டிய நிலை...காலம் கடந்து வருந்தி பயன் ஒன்றும் இருக்க போவதில்லை..

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 4. சரியாக சொல்லி உள்ளீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   தங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..:)

   Delete
 5. என் வயதுடைய ஊர் தோழன் ஒருவனுக்கு குடும்ப தகராறு ....
  சுமார் மூன்று வருடங்கள் நீடித்து இந்த வாரம் தலாக் ஆகிவிடும் போலிருக்கிறது ...
  கொடுமையான விஷயம் ...
  அவனுக்கு கல்யாணம் 4ஆகி வருடங்கள் தான் ஆகிறது ...
  இணக்கம் ஏற்படுத்த வேண்டி நிறைய முயற்சிகள் எடுத்தோம் அப்போது புரிந்த விஷயம்
  கணவன் மனைவிக்குள் சிறு வேற்றுமை கூட கிடையாது ...
  பிரச்சனயே இரண்டு அம்மாக்களால் தான்.....

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   //பிரச்சனயே இரண்டு அம்மாக்களால் தான்.....//

   ஆமாம் இது போல நிறையா கதைகள்..பின் எதற்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களோ தெரியல..வீட்லையே வைச்சுக்க வேண்டி தானே..

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 6. அருமையான பதிவு ஜஸாக்கலாஹ் க்கைர்
  //இதே போல பல நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இப்போதெல்லாம் இறைவனிடம் வேண்டும் பொழுது, உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன். நீங்களும் அவ்வாறே துவா கேளுங்கள். நமக்கு அடுத்த தலைமுறையாவது இந்த பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கட்டும். அதற்கு நாம் முயற்சி எடுப்போம்//

  அழகான வார்த்தைகள் , துவா இன்ஷா அல்லாஹ் எல்லோரும் விரும்புவதும் இதுதான் .ஆனால் நேற்றைய மனைவி , இன்றைய மாமியார் , புது போஸ்ட் கிடைத்ததும் மறந்துவிடுகிறார்களே...!!!
  //பெண்ணின் உணர்வுகளையும், வலிகளையும் ஆண்கள் புரிந்து கொள்ள வில்லை என்றால் கூட ஏற்று கொள்ளலாம் போல.. ஆனால் அனைத்து வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்த , உணர்கின்ற பெண்களே இதை புரிந்து கொள்ளாதது வேதனையான ஒன்றே..இங்கு அதிகம் பெண்களின் நுட்பமான உணர்வுகள் பாதிக்க படுவது ஆண்களை விட பெண்களாலே..எப்படி தான் ஏற்கனவே மனம் புண்பட்டிருக்கும் பெண்ணை நோகடிக்க மனம் வருதோ தெரியல.//

  எனக்கு தெரிந்த வரை மாமனார் மருமகன் சண்டை 100 ல் 1 இருக்கலாம் , ஆனால் மாமியார் , மருமகள் சண்டை 100 ல் 99 இருக்கிறதே...!!

  இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த நிலை மாறனும் ,

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   அழகான வார்த்தைகள் , துவா இன்ஷா அல்லாஹ் எல்லோரும் விரும்புவதும் இதுதான்//

   :) :)

   ஆனால் நேற்றைய மனைவி , இன்றைய மாமியார் , புது போஸ்ட் கிடைத்ததும் மறந்துவிடுகிறார்களே..//

   என்ன சகோ பயமுறுத்துரீங்க..:)

   //மாமியார் , மருமகள் சண்டை 100 ல் 99 இருக்கிறதே...!! //

   ஆனாலும் இந்த கணக்கு கொஞ்சம் அதிகமாத் காட்றா போல இருக்கு..:)

   //இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த நிலை மாறனும்//

   இன்ஷா அல்லாஹ்..

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 7. மாஷா அல்லாஹ் அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. மாமியார்களுக்கு key கொடுக்கும் உறவினார்கள் இதை படித்தில் கண்டிப்பாக மாறுவார்கள். இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக மாற்றம் எற்படும். சிறந்த பகிர்வுக்கு ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரி.

  சகோதர்கள் கருத்துக்களும் அருமை

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   //மாமியார்களுக்கு key கொடுக்கும் உறவினார்கள் இதை படித்தில் கண்டிப்பாக மாறுவார்கள்.//

   இன்ஷா அல்லாஹ்..

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 8. நல்ல பதிவு... மாமியா, மருமகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் முக்கால்வாசி வெளி ஆட்களால் தான் தூண்டிவிடப்படுகிறது என்ற உண்மையை சொல்லி உள்ளீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 9. நல்ல பதிவு அக்கா. சில குடும்பங்களைப் பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

  //இப்போதெல்லாம் இறைவனிடம், உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன்.//

  நானும் இப்படித்தான் கேட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ..:)

   Delete
 10. Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நன்றி சகோ..:)

   Delete
 11. SALAM,
  NICE ARTICLE,THANKS
  -------------------------

  முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
  இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

  கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வரஹ்

   தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நன்றி சகோ..:)

   இன் ஷா அல்லாஹ் சகோ..

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...