Monday 4 February 2013

வென்று காட்டுவோம்..!!


இறைவனின் சாந்தியும், சமாதானமும் இந்த பூமியில் வாழும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக..

இது பெண்களுக்கான பதிவு :

பிப்ரவரி 4---உலக புற்று நோய் தினமாக கொண்டாடப் படுகிறது. கேன்சர் அப்டின்னு சொன்னதும் பெண்களாகிய நமக்கு உடனே நினைவுக்கு வருவது மார்பக புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும் தான்...முன்பெல்லாம் படங்களில் ஹீரோவையோ அல்லது ஹீரோயினியையோ  சாகடிக்கிறதுக்கு  உதவியா இருந்த கேன்சர், இப்ப சர்வ சாதாரணமா அனைவரும் கேள்வி படும் விசயமா போயிடுச்சு..


கேன்சர் அப்டிங்கிற,  வார்த்தை எப்பவுமே எல்லாருக்கும் கொஞ்சம் பயம் தரக் கூடியது தான்... இந்தியாவில் மட்டும் வருசத்துக்கு எழுபது ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார்களாம்... இது 2030-ல்  பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்குன்னு ஒரு மருத்துவ அறிக்கையின் குறிப்பு சொல்லுது... இனி வருங்காலங்களில் 25 பெண்களில் 1 பெண் இதன் பாதிப்புக்கு ஆளாக நேரிடுமாம்.இதை எழுதுகிற நானோ அல்லது படிக்கிற நீங்களோ கூட இதில் இருந்து தப்ப முடியாது... இதை பயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. முன்பு 40-ல் இருந்து 50 வயதுக்குள் இருப்பவர்கள் , அதிலும் பரம்பரையில் யாருக்காவது இருப்பவர்களுக்கு தான் இதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் 25 வயதில் இருந்தே இதை எதிர்பார்க்கக் கூடிய அளவு இதன் தாக்கம் இருக்கிறது.என்ன காரணங்கள்..??


1. பரம்பரையில் யாருக்காவது இருந்திருந்தால்..

2. மிக இளம் வயதிலேயே பூப்படைந்து இருப்பது..


3. மிக தாமதமான மெனோபாஸ்..55 வயதுக்கு மேலும் மெனோபாஸ் வராமல் இருப்பது..


4. அதிகப்படியான எடை.. அதிக கொழுப்பு ஹார்மோன்களில் மாற்றத்தை கொண்டு வருகிறது..இது ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். இது ஆபத்தான விசயமாகும்..


5. வருடக் கணக்கில் எடுத்து கொள்ளும் கருத்தடை மாத்திரைகளும், மெனோபாஸ் பின்பு எடுத்து கொள்ளும் அதிகப்படியான ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியும்.. 


6. மது அருந்துதல்.புகை பிடித்தல்.


7. குழந்தை இல்லாமல் இருத்தல்.


8. அதிகப்படியான மன உளைச்சல்.


9. இது எதுவுமே இல்லாமலும்.


நாமே எப்படி அறிந்து கொள்வது..??

1. செலவில்லாத ஒண்ணு தான்..நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய பரிசோதனை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நின்ற பின்னர் ஏழு நாட்களுக்கு பின்  (இது முக்கியம்) ஒரு குறிப்பிட்ட நாள்களில், நம் மார்பங்களில் எதுவும் மாறுபாடோ, அல்லது சிறு கட்டிகளோ இருக்கான்னு கண்ணாடி முன்பு நின்று கொண்டு நேராகவும், கைகளைத் தூக்கியும் பரிசோதித்து கொள்ளுதல்.


2. அதே போல படுத்துக் கொண்டும் பரிசோதித்து கொள்ளுதல்.

என்ன அறிகுறிகள்..??


1. சிறு கட்டிகள் கைகளுக்கு தட்டு படுதல்


2. திடிரென்று அளவில் வேறுபாடு, பொதுவாக அனேகருக்கு இரண்டு மார்பங்களின் அளவுகள் ஒன்று போல் இருப்பதில்லை.

3. காம்பைச் சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள்.

4. காம்பில் இருந்து ரத்தமோ, நீரோ வடிதல்.

5. காம்பு உள்வாங்கி இருப்பது.

6. தோல் சுருங்குதல், அல்லது தடித்தல்.

7. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி தவிர திடீரென வலி ஏற்ப்பட்டால்.

4.கண்டறியும் மருத்துவ சிகிச்சை முறைகள் .??


1.மேமோகிராம் என சொல்லக் கூடிய மார்பங்களை எக்ஸ்ரே செய்யக் கூடிய சிகிச்சை முறை..

2.அல்ட்ரா சவுண்ட் என்ற  அதிகப்படியான அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தில் செலுத்தி, மார்பகத்தின் கட்டி திட வடிவத்தில் உள்ளதா..?
அல்லது திரவ வடிவத்தில் உள்ளதா என கண்டறியும் முறை..

3.நீடில் பயாப்ஸி எனப்படும் மிக நுண்ணிய ஊசியை உள்ளே செலுத்தி கட்டியில் இருந்து சில செல்களை எடுத்து பரிசோதிக்கும் முறை.

5.வந்த பின் சிகிச்சை முறைகள்..??


1.கீமோதெரபி, ஹார்மோனல் தெரபி, அறுவை சிகிச்சை,(லக்பாக்டமி,மாஸ்டெக்லொமி, ரேடிகல் மாஸ்டெக்டமி,மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி) 


இத பத்தி எல்லாம் நாம பெரிசா கவலப் பட வேணாம்..இது நோயோட தீவிரத்தைப் பார்த்து டாக்டர் தீர்மானிப்பது..நோய் இருக்குன்னு தெரிஞ்ச உடனே நாம செய்ய வேண்டிய ஒன்று, ஒரு நல்ல டாக்டரை தேர்ந்தெடுப்பது மட்டுமே. என்னடா இவுங்க ஏதோ வந்தா போலவே பேசுராங்கன்னு நினைக்க வேணாம்..எப்படி நமக்கு இது வரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லையோ, அதே போல இது வராமல் இருப்பதற்கும் உத்திரவாதம் இல்லை. நம் எல்லாருக்கும் பிரசவ வார்டுக்குள்ள போற வர தான் பயம் இருக்கும்.அதுக்கப்பறம் நம் உடம்பு நமக்கில்லை அப்டிங்கிற உணர்வு வந்திடும்.ஏன்னா அங்க நம்ம பேச்சுக்கு வேலை இல்ல. உள்ள எதுன்னாலும் நாம தான் தாங்கியாகணும்..அதே மனநிலை தான் இங்கேயும்.சரி இத எப்டியாவது தவிர்க்க முடியுமான்னு ..நம்மால செய்ய முடிந்த சில வழிமுறைகள பார்க்கலாம்.முக்கியமா உடல் எடை  கல்யாணம் வரை உடலை பார்த்து பார்த்து வைத்து கொள்ளும் பலரும் ஒரு குழந்தை பிறந்ததும் அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல இருப்பது..எப்ப நாம போடும் பிளவ்ஸ் ஆர் சுடிதார் டைட் ஆகுதோ அப்பவே சுதாரிச்சுக்கணும்.உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி என எந்தந்த வழியில் முடியுமோ அதை செய்து  நம் உயரத்திற்கு ஏற்ற சீரான உடல் எடையை கொண்டு வரணும்.அதை எப்போதும் ஒரே மாதிரி கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது அவசியம்.

மனதை எப்போதும் சந்தோசமா வைத்திருப்பது..அது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று என்ற போதும் அதை முடிந்த வரை கடைபிடிக்கணும்..தினமும் நமக்கே நமக்காக ஒரு மணி நேரத்தை நமக்கு பிடித்த விதமா செலவு செய்யக் கத்துக்கணும்.அது புக் படிப்பதாக, காலார நடப்பதாக , தையலாக,பாடம் சொல்லிக் கொடுப்பதாக, குறுக்கெழுத்து போட்டியை கண்டு பிடிப்பதாக, நட்புடன் அரட்டை அடிப்பதாக, குழந்தைகள் விளையாட்டை வேடிக்கை பார்ப்பதாக அப்டின்னு  எதுவாவேனும் இருக்கலாம்.அது நம் அன்றைய கவலைகளையும், டென்ஷனையும் போக்க ரெம்ப உதவியா இருக்கும்.

எல்லாம் சரி தான் வந்துருச்சு என்ன பண்ண அப்டின்னா ..?? அப்டியே அத தூக்கி விதி மேல பழிய போட வேண்டியது தான்...அது , ஏன் என் மேல இப்டி ஒரு பழியப் போட்ட அப்டின்னு கேக்க போறதில்ல..அதோட சொந்த காரங்களும் நம்மக்  கிட்ட பஞ்சாயத்துக்கு வரப் போறதில்ல.. அப்றம் என்ன..? :) நம் வாழ்க்கையில நடக்கும் சில நிகழ்வுகள் நம்மனால தவிர்க்க முடியாதது. அது ஏன் நடக்குது.. எதுக்கு  நடக்குது என தெரியாமலே எல்லாமே இறையின் நாட்டமுன்னு சொல்றத போல இதையும் அவனின் நாட்டம் அப்டின்னு எடுத்துட்டு  இதை தாங்க கூடிய அளவு மனபலத்தையும், உடல்நலத்தையும் தா அப்டின்னு வேண்டுறத தவிர வேற வழி இல்லை..

இப்ப யூ டியூப்பில் அமெரிக்கால இருக்கிற  டலியா அப்டிங்கிற 12 வயசு சின்ன பொண்ணு ரெம்ப பிரபலம்..அந்த பெண்ணின் உற்சாகமான பேச்சுக்களும், செயல்களும், அழகாக பதிவு செய்யப்பட்டு இருக்கு..அந்த பொண்ணுக்கு 7 வயதில் முதல் முதல கேன்சர் வந்திருக்கு..சரியான மருத்துவ சிகிச்சையும், டலியாவின் மன உறுதியும், குடும்பத்தின் ஆதரவும் ( இது ரெம்ப முக்கியம் ) அதை விரட்டி அடிச்சுருக்கு..எல்லாம் கொஞ்ச காலம் தான் திரும்பவும் கேன்சர்.

இந்த முறை டலியாவை நியுரோபிளாஸ்டோமா, லுக்கோமியா அப்டிங்கிற எழும்பு மஜ்ஜையில் தாக்க கூடிய கேன்சர் தாக்கிருக்கு..அறுவை சிகிச்சை செய்தாலும், செய்யலைனாலும் இந்த சிறுமியின் ஆயுட்காலம் இன்னும் 4 மாதம் முதல் 1 வருடம் தான் அப்டின்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க.ஆனா இது எத பத்தியும் கவலப் படாம அச்சிறுமி மிக சந்தோசமா தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தன்னை போல பாதிக்கப் பட்ட சிறுவர், சிறுமிகளுடன் நட்பு பாராட்டிட்டு, அடுத்தவுங்களுக்கு எடுத்து காட்டா வாழ்ந்துட்டு இருக்கு..இறைவன் டலியாவுக்கான நற்கூலிகள் அனைத்தையும் வழங்க என் து ஆக்கள்..

டலியாவின் யூ டியூப் லிங்க்..https://www.youtube.com/watch?v=DwKRAWMiBwo

சகோதரி
ஆயிஷா பேகம். 
Related Posts Plugin for WordPress, Blogger...