Friday 17 February 2012

அதிரடி எடைக் குறைப்பு..!

நாம் அனைவரும் அதிரடி விலைகுறைப்பு பற்றித் தானே கேள்வி பட்டு இருக்கோம் ...! இது இப்போது உலகத்தில் பிரபலமாக இருக்கும் எடைக் குறைப்பு முறை பற்றிய பதிவு..!

ஜி.எம்.டயட் ;


கார்கள் மற்றும் மோட்டார் பாகங்கள் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமான ஜெனரல் மோட்டார் தன் ஊழியர்களுக்காக கொண்டு வந்த டயர் சார்ட் தான்  ஜி.எம்.டயட்.அமெரிக்காவில் உள்ள அக்ரிகல்சர் அண்ட்ஃ புட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் (Agriculture and food and drug administration) இந்த ஃ புட் சார்டை அங்கீகரித்துள்ளது 

ஒரே வாரத்தில் ஐந்து கிலோ எடைக்குறைப்புக்கு உத்திரவாதம் என்ற ரிசல்ட் ஆச்சரியப்படும் படி இருக்கவே,இப்போது உலகம் முழுவதும் ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது.  

இதற்கான நிபந்தனை இந்த டயட்டை எடுத்துக் கொள்பவர்கள் எந்த வித உடல் நோய்களும் இல்லாமல் இருத்தலும்,ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடித்தாலும் ஆகும்.

இனி ஒரு வாரத்திற்கான சார்ட்..
1.வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் நாள் முழுக்க எவ்வளவு வேண்டுமானானும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் .(உடனே பலாப்பழம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா எனக் கேட்கக் கூடாது )
2 .அவித்த உப்பு சேர்த்த உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.தவிர சமைத்த மற்றும் சமைக்காத காய்கறிகளை (சாலட்டுக்களை ) எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.(இந்த இடத்தில் இது எல்லாம் சாப்பிட்ட பின்பா அல்லது முன்பா என்ற கேள்வி வரக்கூடாது )
3 .பழங்கள் காய்கறிகளை எவ்வளவு முடியுமோ சாப்பிடலாம் . உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர .
4 .வாழைப்பழங்கள்,மூன்று டம்ளர் பால்,இரவுக்கு கொஞ்சம் சூப் (இப்படியெல்லாம் இருந்து உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி உங்கள் மனதிற்குள் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை)
5 .வெஜிடேரியன் நபர்கள் ஒரு கப் சாதம்,ஆறு பெரிய தக்காளி,சாப்பிடலாம். நான்வெஜிடேரியனாக இருந்தால் பீஃ ப் (மாட்டுக்கறி )  ஆறு பெரிய தக்காளி,  சாப்பிடலாம்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாராளமாக தண்ணீர் அருந்தலாம்.(என்ன ஒரு தாராளமான மனம் பாருங்கள் )
6 .வெஜிடேரியன் நபர்கள்  ஒரு கப் சாதம் (காய்கறிகளை) சமைத்தோ ,சாலட்டுகளாகவோ,எவ்வளவு முடியுமோ சாப்பிடலாம்.   நான்வெஜிடேரியனாக இருந்தால்  ஒரு கப் சாதம் ,  பீஃ ப் (மாட்டுக்கறி ) இது தான் முழுநாளுக்கான உணவு (என்ன ஒரு பெருந்தன்மை )
7 .ஒரு கப் சாதம்,நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் இவற்றை முடிந்த அளவு சாப்பிடலாம்.

 தேவை உள்ளவர்கள் பயன் படுத்தி வெற்றி அடைய வாழ்த்துக்கள்..! 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

Wednesday 15 February 2012

இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா ...?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நம் சமூகத்தில் மார்க்கம் சொல்லிய படி,  நம் பெண்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் கூட்டம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புறக்கணிக்கும் ஒரு கூட்டம், இந்த நிலை ''எல்லா சமூகத்திலும் '' தான் இருக்கிறது , என்றாலும் , நம் மார்க்கம் நமக்கு அப்படித் தான் சொல்லி தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி..? 

பெண்களுக்கு என்று எந்த ஒரு உரிமையும் இல்லை அவர்கள் வெறும் போகப் பொருள்கள் தான் என்று இருந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கௌரவமான இடத்தைக் கொடுத்து அவளுக்கென கண்ணியத்தையும் ,உரிமையையும் மேன்மையையும் ,எல்லாவற்றிலும் சம அந்தஸ்தைத் தந்ததோடு மட்டும் அல்லாமல்,பெண் பிள்ளைகளை நல்லபடி வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு சுவனம் செல்லும் வாய்ப்பு உண்டு என சொன்ன மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்.

ஆனால், நடைமுறையில்.? இத்தனை வருடம் கழிந்தும் பெண்களுக்கான திருமணம் குறித்தான உரிமை சரியான முறையில் வழங்கப் பட்டிருக்கிறதா ..? என்றால்,இல்லை என்பதை வருத்ததுடன் தான் சொல்ல வேண்டியதாக  இருக்கிறது. நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் திருமணத்தை எத்தனை வீடுகளில் பெண்களின் மனம் அறிந்து திருமணம் செய்து கொடுக்கிறார்கள்..? 

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறுதியான ஒரு ஒப்பந்தம்.அது எல்லாவிதத்திலும் பொருத்தம் கொண்டதாக இருக்க வேண்டும்.நேசத்திலும்,நட்பிலும்,,இன்பத்திலும், துன்பத்திலும் நம் வாழ்க்கை முழுவதும் கைபிடித்து வரக்கூடிய துணை,தன் விருப்பம் போல் அமையக் கொடுத்து வைக்க வில்லை என்றால் அதை விட பெரிய நஷ்டம் ஒரு பெண்ணுக்கு இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

திருமணத்தை குரான் ஒரு உறுதியா வாக்குறுதி (மீசாக்)  என்கிறது. (4:21) . 

திருமணத்திற்கு  பெண்களின் சம்மதம் முக்கியம் என்றும் மணமகனை பெண்ணும் மணப்பெண்ணை பையனும் பார்த்து ஒருவருக்கொருவர் பிடித்து இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது நபி மொழி .ஆனால் நடைமுறையில் ? சில வீடுகளில் மணமகனின் புகைப்படமாவது காட்டப் படுகிறது,ஆனால், இன்னும் சில வீடுகளில் அதுவும் இல்லை. 

விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)

முதலில் நம் பெண்களுக்கே நம் மார்க்கம் தனக்காக என்ன சொல்லியிருக்கிறது என தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி ..? இன்னும் எங்க மதத்தில் மாப்பிள்ளையைப் மணப்பெண் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கு என்று சொல்பவர்களே அதிகம்.யார் வந்து இவர்களிடம் வந்து இதை சொன்னார்களோ தெரிய வில்லை? 

பொதுவாக பெண்கள் மணமகனைப் பார்க்காமலே திருமணம் நடந்தாலும், கணவன் என ஆனதும் தன்னுடையவன் என்ற உணர்வோடு எல்லாவற்றையும் தனக்கு பிடித்ததாக ஆக்கிக் கொள்வார்கள் .தன் கணவன் என்றும் ,தன் கணவனின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இயல்பிலேயே உண்டு.  அது பெண்களுக்கே அமைந்த இயற்கையான குணம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பிடிக்க வில்லை என வரும் போது அது மிகப் பெரும் இழப்பாக ஆகிறது. மணமகனைப் பிடிக்காமல்( முதலில் அப்படி வெளிப்படையாக சொல்லமுடியுமா என்பதும் கேள்வி தான் ) வரும் பெண்ணுக்கு அவ்வளவு எளிதாக மறுமணம் செய்ய முடியுமா..? இன்றைய காலகட்டத்தில்..?

 நம் பெண் நாம் சொல்லும் எல்லாவற்றிக்கும் தலை ஆட்டுவாள் என்பதை மனதில் வைத்து கொண்டு அவளுக்கும் விருப்பம் என்று ஒன்று இருக்கும் என்பதை மறந்து .தன் இஷ்டத்திற்கு தன் அந்தஸ்தையும், தன் போலி கௌரவத்தையும் மனதில் வைத்து கொண்டு  முடிவு எடுக்கும் பெற்றோர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தன் நிலையில் இருந்து அவர்கள் மாற வேண்டும்.

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி) நூல்: (புகாரி 5139, 6945, 6969)

நம் மார்க்கம் பற்றிய தெளிவும், மார்க்கம் சொல்லிய படி தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என பெண்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்காத வரை  இந் நிலை மாறப் போவதில்லை.ஆனால் அதை சொல்வதற்கு முதலில் அவளுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலும் அது பெண்ணுக்கு வழங்கப் படுவதில்லை.என்பது ஒரு கசப்பான உண்மை. 

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.பெண்களுக்கு சரியான முறையில் முடிவு எடுக்க தெரியாது ,அனுபவம் பத்தாது என்பதாகும் .பிடிக்காத கணவனைக் கட்டிக் கொண்டு ஐம்பது வருடம் வாழ்வதை விட மனதிற்கு பிடித்த கணவனைக் கட்டிக் கொண்டு பத்து வருடம் வாழ்ந்தாலேபோதும்என்று தான் ஒவ்வொரு பொண்ணும் நினைப்பாள். 

நல்ல மார்க்க அறிவு உள்ள பெண்களிடம் தான் தனக்கு என்ன தேவை என்பது பற்றியத்  தெளிவு இருக்கிறது.அதுவே சமயத்தில் அடுத்தவர்கள் பார்வையில் திமிர் பிடித்தவள் என சொல்லப் படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் தனக்கான உரிமையை ஒரு பெண் விட்டு கொடுக்க கூடாது.அனுமதிக்க பட்ட விதத்தில் நம் விருப்பத்தை வெளிப்படையாக சொல்லி பெற்றோர்களை ஏற்கச் செய்வது ஒவ்வொரு பெண்ணின் கட்டாயக் கடமை ஆகும். 

ஆனால், தனக்கு தகுதி இல்லாத மார்க்கத்திற்கு முரணான மாப்பிள்ளையை ஒரு பெண் தேர்வு செய்தாள், எனில் அதை முற்றிலுமாக புறக்கணிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் 

என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். 'என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை' என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ) 

ஆனால், அதே சமயத்தில் தானாக ஒரு பெண் தகுந்த பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்வதை மார்க்கம் அனுமதிக்க வில்லை.ஒரு சில பெண்கள் தானாகவே பிடித்தவர்களுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதை மார்க்கம் தடை செய்கிறது.இதுவும் பெண்ணின் பாதுகாப்பு கருதியே,மணமகன் ஒருவேளை மணமகளைப் பிரிய நேரிட்டால் யாரிடம் அந்தப் பெண் முறையிடுவாள்.?  ஒரு திருமணம் முழுமை பெற நான்கு முக்கிய அம்சங்கள் வேண்டும். 

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
 2. மணமக்களின் முழுமையான சம்மதம் (ஈஜாபு கபூல்)
 3. இரு நீதமுள்ள சாட்சிகள்
 4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
 என நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையிட்டார்கள்.
 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
 


இங்கு மஹரைப் பற்றி பேச வில்லை. அதை குறித்து தனி பதிவாகத் தான் போட வேண்டும். மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு ''மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டார் வைக்கும் ''நிபந்தனைகளும் கோரிக்கைகளும் '' யாரை ஏமாற்ற எனத் தெரிய வில்லை.அல்லாஹ் காப்பாற்றணும்.

தன் பெற்றோர் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன் பெற்றவர்களின் மனம் வேதனைப் படக் கூடாது  என்பதற்காக,திருமணம் செய்து கொண்டு மனதிற்குள் வேதனைப் பட்டுக் கொண்டு வாழும் சகோதரிகள் எத்தனையோ பேர்.

ஆனால் அவர்கள் அதை வெளியில் சொன்னாலும், நம் சமுதாயம் அவர்களை சும்மா விடுமா எனத் தெரிய வில்லை உடனேகண் ,காது,என இன்ன பிற உறுப்புகளை வைத்து பேசி அவர்களை ஒன்றும் பேச விடாமல் செய்து விடும். என்பதே உண்மை. இன்ஷா அல்லாஹ் இனி மேலாவது வரும் காலங்களில் இந்த நிலை மாற வேண்டும்.

இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)

சகோதரி.
ஆயிஷா பேகம்.

நோய் விட்டு போகுமாம் ..!



''சார் என் தலையில எறும்பு ஏறுது பாருங்க''
''அத ஏண்டா என்கிட்டே சொல்ற?''
''நீங்க தான சார் என் தலைல எதுவுமே ஏறாதுன்னு சொன்னிங்க ''
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
---------------------------------------------------- 
''டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன்,உருண்டையா பெரிசா இருந்த மாத்திரை தான் முழுங்க கொஞ்சம் சிரமமா இருத்துச்சு!"
''பேப்பர் வெயிட்ட எடுத்துட்டு போனது நீ தான..?  
--------------------------------------------------------
''நான் தினமும் உங்களை ஒரு பச்ச முட்ட சாப்பிட சொன்னேனே சாப்டிங்களா..?  
''எந்த கடையில போய் கேட்டாலும் முட்ட வெள்ளையா தான் இருக்கு டாக்டர்..!''
----------------------------------------------------------
''நான் டைலரா வேல பாக்குறத டாக்டரிடம் சொல்லி இருக்க கூடாது ''
''ஏண்டா' என்ன ஆச்சு''
''என் பையனுக்கு ஆபரேசன் பண்ணியதும் நீங்களே தையல் போட்டுகோங்க அப்டின்னு சொல்லிட்டு போயுட்டாருடா ''
-----------------------------------------------------------
''கள்ள நோட்டு அடிச்ச குற்றத்துக்காக உனக்கு இரண்டு வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன்''
''அந்த பத்தாயிரத்தை கள்ள நோட்ல இருந்து கட்டலாமா எசமா..?"'
-------------------------------------------------------------------------
''கரெக்டா ஆபீஸ் போகலாம்ன முடிய மாட்டேங்குது ''
''ஏன் ஆபீஸ்,ரெம்ப தூரமா''
''அது இல்லப்பா வேல கிடச்ச தான போக முடியும் ''
--------------------------------------------------------------------------
''ஒரு துணிய இரண்டா கிழிச்சா என்ன ஆகும் ''
''துணி ரெண்டாகும் சார் ''
''அதையே அம்பது தடவ கிழிச்சா ..?''
''மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணுவாங்க சார் ''
!!!!!!!!!!!!!!!!!!!!!!
--------------------------------------------------------------------------    
''அடேய் இந்த இடத்துக்கும் உன் மூளைக்கும் சின்ன வித்தியாசம் தான் ..?
''எப்டிடா..?
''இது ஈசான மூலை..!அது ஃ ப்யூசான முளை..!''
!!!!!!!!!!!!!!!!!!!!!!
-------------------------------------------------------------------------
''டேய் நேத்து கட் அடிச்சிட்டு சினிமாக்கு தான போன ..''
''அத பத்தி ஞாபகமூட்டி என் கோவத்த கிளராதிங்க சார்..! படமா சார் அது..!''
----------------------------------------------------------------------------
''கணக்குல பாபு தொண்ணூறு மார்க் வாங்கிருக்கான் .ஆனா நீ வெறும் மூணு மார்க் தான் வாங்கிருக்க ..! இதிலிருந்து என்ன தெரியுது ..!
''நல்ல படிக்கிறவன் பக்கத்தில  இருந்து பாபு பரிட்சை எழுதிருக்கான்னு ..!'' 
------------------------------------------------------------------------------  
''இன்னைக்கு ஸ்கூலுக்கு போய் என்னடா தெரிஞ்சுகிட்ட..''
''நீங்க சொல்லி குடுத்த கணக்கு தப்புன்னு ..!''
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
----------------------------------------------------------------------------------
''நேத்து தான் உங்க கிளாஸ் சூப்பரா இருந்துச்சு சார்''
''நான் தான் நேத்து பாடமே நடத்தலையே ..''
''அதுனால தான் சார்'' 
------------------------------------------------------------------------------------
''நீங்க மீன்,கோழி,ஆடு,சாப்பிடுவதை  உடனே நிறுத்தனும்..''
''அதுங்க சாப்புடுறத நான் எப்டி சார் நிறுத்த முடியும் ''
-----------------------------------------------------------------------------------------
''என் வீட்டு பூட்ட உடச்சு அஞ்சு லட்சத்த திருடிட்டு போயிட்டாங்கடா''
''பூட்டுக்குள்ள எப்டிடா அஞ்சு லட்சத்த வச்சுருந்த..?  
!!!!!!!!!!!!!!!!!!!!!!
-----------------------------------------------------------------------------------------   
''அங்க பயங்கரமா சண்டை நடக்குதே,எதுக்கு..?
''அமைதிய நிலைநாட்டுவது எப்டின்னு அவுங்களுக்குள்ள சண்டையாம்..''
-----------------------------------------------------------------------------------------
''எதிர் வீட்டுக்காரி காலையில் இருந்து ஒரு வேலையும் பாக்காம வெட்டியா பொழுத போக்குறா..''
''உனக்கு எப்டி தெரியும்''
''நான் தான் காலைல இருந்து பார்த்துட்டே இருக்கேனே..''  
--------------------------------------------------------------------------------------------- 


Monday 13 February 2012

பொக்கிஷம்..?


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு காலையில் போய் தூரத்தில் உள்ள ஒரு மலையை பார்த்துட்டு நின்னா கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பெரிய பொக்கிஷம் இருக்குன்னு ஒருவன் கேள்விப்பட்டான்.உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை போய் அடைந்தான் .மணல் மேல அவன் நிழல் நீண்டு மெல்லிசா விழுந்துச்சு.அவனும் பொக்கிஷத்துக்காக மணலை தோண்ட ஆரம்பிச்சான்.அவன் தோண்ட தோண்ட சூரியன் மேலே எழும்பிட்டே இருத்துச்சு.அவனது நிழலும் சுருங்கிட்டே இருத்துச்சு. அவனும் தோண்டிடே இருந்தான்.

நண்பகல்ல அவனோட நிழல் அவன் காலடிக்குள்ள வந்துச்சு.நிழலே இல்ல.அவனுக்கோ பெருத்த ஏமாற்றம்.இவ்வளவு கஷ்டப்பட்டும் நமக்கு பொக்கிஷம் கிடைக்கலையே அப்டின்னு அழுது புலம்பினான்.அப்ப அந்த வழி வந்த ஒரு பெரியவர் விவரம் கேட்டு விட்டு சொன்னார்.இப்போது தான் நிழல் சரியான இடத்தைக் காண்பிக்கிறது.பொக்கிஷம் உன் உள்ளே இருக்கிறது. அது தெரியாமல் நீ எங்கெங்கோ அலைகிறாய் என்று.உண்மை தானே, நம்மில் பல பேர் நம்மிடம் இருக்கும் திறமையை நம்பாமல் அடுத்தவர்களை பார்த்து பொறமை பட்டுக் கொண்டு வீணாக பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கிறோம்.

உள்ளத்தில் நம்பிக்கை கொண்டால் செயலில் வெற்றி பெறலாம். 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

Sunday 12 February 2012

சிறப்புத் தொழுகை..!

ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


ஸலாத்துல் ஹாஜா:.  
நமக்கு சிறிதோ பெரிதோ -தேவைகள் ஏற்பட்டு இருந்தால் இறைவனின் சந்நிதியில் நின்று இரண்டு ரக்அத் நஃ பில் -உபரித் தொழுகை - ஸலாத்துல் ஹாஜா தொழுது கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து தரூத் ஸலவாத் ஓதவும். அடுத்து பின்வரும் துஆ -பிராத்தனையை ஓத  வேண்டும்.'அல்லாஹ் என்னுடைய துஆ -பிராத்தனையை நிராகரிக்க மாட்டான்' என உறுதியாக நம்ப வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் .'ஒருவருக்கு அல்லாஹ்விடமோ அல்லது வேறு மனிதரிடமோ ஒரு தேவை இருக்கும் பட்சத்தில் அவர் நன்கு ஒளு செய்து இரண்டு 'க்அத்'கள் தொழுது கொள்ளட்டும்.பிறகு,இறைவனைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதட்டும்.இறைவனிடம் இவ்வாறு ஓதட்டும் .

லா இலாஹா இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீமு ஸுப்ஹானல்லாஹி ரப்பில் 'அர்ஷில்'அஸ்மி வல்ஹம்துலில்லாஹி ரப்பில் 'ஆலமீன அஸ்அலுக முஜிபாதி ரஹ்மதிக வஅஸர் ஆஇமி மக்ஃபிரதாக வல்'கனீ மத மின்குல்லி பிர்ரி வஸ்ஸலமாத மின்குல்லி இஸ்பன் லாத்த'லீ ஸுன்பன் இல்லா 'கஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலாஹாஜதன் ஹியலகரிஸன் இல்லா கஸீதஹ யாஅர்ஹமர் ராஹிமீன்.

பொருள் ;
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் எவருமில்லை!அவன் மிகவும் சகிப்புத்தன்மையுடையவன்;மேலும், பெரும் அருளாளன்!பெரும் அர்ஷ்-க்கு அதிபதியாகிய அந்த அல்லாஹ் பரிசுத்தமானவன்.மேலானவன்!இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அந்த அல்லாஹ்வுக்கே உரித்தாகியது!

(இறைவா) உனது கருணையே அவசியம் ஈட்டித் தரும்,மேலும்,உன் மன்னிப்பை கண்டிப்பாகப் பெற்றுத் தரும் விசயங்களை நான் உன்னிடம் யாசிக்கிறேன்.ஒவ்வோரு நன்மையிலும் பங்கை வேண்டுகிறேன்.மேலும்,ஒவ்வொரு பாவத்தை விட்டும்,பாதுகாப்பை உம்மிடம் தேடுகிறேன்.மேலும்,என்னுடைய எந்த துக்கத்தையும்,கவலையையும் அகற்றாமல் என்னை விட்டுவிடாதே!மேலும்,உன்னிடம் விருப்பமான என்னுடைய எந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் என்னை விட்டு விடாதே!கருணை புரிபவர்கள் அனைவரையும் விட அதிகக் கருணை புரிபவன் நீயே!   

சகோதரி.
ஆயிஷா பேகம்.
      
       
      

Wednesday 8 February 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!


ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


76)அஷ்  ஷாகிர்;

மக்களின் நல்லறங்களை மதிப்பவன்!

''மேலும்,அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும்,அவர்களை நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்''(4:147)

77)அல் முஸ்தஆன்;
உதவி கோரப்படத் தகுதியானவன்!

''அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்''(12:18)

78)அல் பதீ;
படைப்பினங்களை முன்னுதாரமின்றிப் படைத்தவன்;ஒப்பற்ற படைப்பாளன்!

''ஆதியில் வானங்களையும் பூமியையும் படைத்து உருவாக்கியவன் அவனே''(2:117)

79)அல் ங்காஃபிர்;
பாவங்களை மன்னித்தருள்பவன்!

''(அல்லாஹ்) பாவத்தை மன்னிப்பவன்;பாவமன்னிப்புக் கோரி மீள்வதை ஏற்றுக் கொள்பவன்''(40:3)

80)அல் ஹாகீம்;
படைப்பினங்கள் மீது ஆட்சி செலுத்துபவன்.தனித்த ஆட்சியாளன்.மேலும்,சட்டம் இயற்றுபவன்!

''எது சிக்கீரம் வர வேண்டும் என்று நீங்கள் அவசரப்பட்டு கொண்டிருக்கிறீர்களோ அதைக் கொண்டு வரும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை.தீர்ப்பின் அதிகாரங்களும் அல்லாஹ்வுக்குத் தான் உரியன.அவன்தான் சத்தியத்தை தெளிவாய் விவரிக்கிறான்.மேலும் அவன் தான் தீர்ப்பு வழங்குவோரில் மிகச்சிறந்தவன்''(6;57)

81)அல் காலிப்;
முழுமையான அதிகாரம் பெற்றவன்.அனைவரையும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன்.

''அல்லாஹ் தம் விஷயத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவன்''(12:21)

82)அல் ஹகம்;
நீதமாக தீர்ப்பளிப்பவன்!

''அல்லாஹ்வை விடுத்து வேறொரு தீர்ப்பாளனையா நான் தேடுவேன்? ''(6:114)

83)அல் ஆலிம் ;
மறைவானவை வெளிப்படையானவை என ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவன்!

84)அல் முத்'ஆல்;
அனைத்து நிலைகளிலும் உயர்ந்தவன்;கண்ணியமிக்கவன்!

''மறைவான,மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அவன் அறியக் கூடியவனாகவும் மிக உயர்ந்தவனாகவும் (எல்லா நிலையிலும்) மேலானவனாகவும் இருக்கிறான் ''( 13:9)

85)அல் ரஃபீ;
உயர் தகுதியுடையவன்!

''அவன் (அல்லாஹ்) உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்;அர்ஷின் உரிமையாளன்''(40:15)

86)அல் ஹாபிஸ்;
ஆபத்துகளிலிருந்தும் விபத்துகளிலிருந்தும் காப்பாற்றுபவன்!

''அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாதுகாவலன் ''(12:64)

87)அல் முன்தகிம்;
தன்னுடைய வாய்மையான மக்களின் பகைவர்களைப் பழிவாங்குபவன்!

''எவர்கள் குற்றம் புரிந்தார்களோ,அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவது நம் மீது கடமையாக இருந்தது''(30:47)

88)அல் 'கா'இம் பில் கிஸ்த்;
நீதனமாக நடந்து கொள்பவன்;ஒழுக்கம் பேணுபவன்!

89)அல் இலாஹ்;
வணங்கப்பட தகுதி வாய்ந்தவன்.அவனைத் தவிர வேறு எவரும்,அதுவும் வணங்கப்பட தகுதி அற்றவை!

''வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' (3:18)

90)அல் ஹாதி;
நேர்வழியில் நடத்துபவன்;தூதர்களையும் வேதங்களையும் அனுப்பி வைத்தவன்.

''உறுதியாக,அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு என்றென்றும் நேர்வழியைக் காண்பிக்கக் கூடியவனாக இருக்கின்றான்''(22:54)

91)அல் ரவூஃப்;
மக்களின் மீது அளவு கடந்த பரிவுடையவன்!

''அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகுந்த பரிவுடையவனாய் இருக்கிறான்''(2:207)

92) அந் நூர்;
ஈருலகிற்கும் வெளிச்சம் தருபவன்;ஒளியின் தோற்றுவாய் அவனே!

''அல்லாஹ் வானங்கள்,மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான்''(24:35)

93)அல் அக்ரம்;
கண்ணியத்திற்கு உரிமையாளன்.மனிதர்களிடம் உயர்வாக நடந்து கொள்பவன் !

''மேலும்,உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் ''( 96:3)

94)அல் அஃலா;
அனைவரையும் விட மிக உயர்ந்தவன்!

''(நபியே) உயர்வான உம் இறைவனுடைய திருப்பெயரை துதிப்பீராக''(87:1)

95) அல் பர்;
படைப்புகளுக்குப் பேருபகாரம் செய்பவன்!

''அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்''(52:28)

96)அர் ரப்;
பரிபாலிப்பவன்;ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்றுபவன்.வளரும் அனைத்து கட்டங்களிலும் வாழ்வாதாரம் வழங்குபவன்;அதிபதி;எஜமானன்!

''எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ''ரப்'' ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும் ''(1:1)

97)அல் ஹஃபிய்யு;
படைப்பினங்கள் விஷயத்தில் அதீத அக்கறையுள்ளவன்!

''நிச்சயமாக என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கிறான்''(19:47)

98) அல் அஹத்;
ஒருவன், இணை-துணை இல்லாதவன்!

99)அஸ்ஸமத்;
எவருடைய தேவையுமற்றவன்;யாவரும் அவனிடமே தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

''கூறுவீராக! அவன் அல்லாஹ்; ஏகன்! அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தகைய தேவையும் இல்லாதவன்;அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே''(112:1,2)  

இறைவனின் திருப் பண்புகளை விவரிக்கும் பெயர்களை மனனம் செய்து கொள்வது என்பது விசாலமான பொருள் கொண்டதாகும்.
எத்தனையோ வகையில் நாம் நம் நேரத்தை வீணாக செலவு செய்து கொண்டு இருக்கிறோம்.இதில் நாம் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி இறைவனின் திரு நாமங்களை மனனம் செய்து அல்லாஹ்வின் வெகுமதியை பெற முயற்சிப்போம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக! ஆமீன் ..   

சகோதரி.
ஆயிஷா பேகம்.

        

              
                   

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!

ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


46)அல் கரீம்;
அருட்கொடையாளன்;விசால மனம் படைத்தவன்;விசால குணத்துடன் மக்களை அதிகமதிகம் மன்னிப்பவன்!நல்ல முறையில் நடத்துபவன்!

''மனிதனே!அருட்கொடையாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?அவனே,உன்னைப் படைத்தான்;உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்.மேலும்,தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான் ''(82:6-8)

47) அல் கனீ;
படைப்பினங்களின் பால் தேவையற்றவன்!

48)அல் ஹமீத் ;
புகழுக்குரியவன்,படைப்பினங்கள் அவனை புகழ்வதை விட்டும் தேவையற்றவன்!

''யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயணிக்கும்.யாரேனும்,நன்றி கொன்றால்-உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்''(31:12)

49)அல் கவிய்யு;
பெரும் வல்லமை கொண்டவன்;அவன் முன் எவருடைய வலிமையையும் எடுபடாது!

50)அஷ் ஷதீத் ;
கடுமையாகப் பிடிப்பவன்.அவனுடைய பிடியிலிருந்து தப்ப முடியாது!

''ஃ பிர்அவ்னை சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல் தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள்!எனவே,அவர்களுடைய பாவங்களின் காரணத்தால்,அல்லாஹ் அவர்களைப் பிடித்து கொண்டான்.(உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கிறான்''(3:11)

 51)அர் ரகீப் ;
மக்களின் செயல்பாடுகளையும்,விவகாரங்களையும் எப்போதும் கண்காணிப்பவன்!

''திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்.அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் ''(4:1)

52)அல் கரீப்;
மக்களுக்கு மிக அருகில் உள்ளவன்.

53)அல் முஜீப்;
மக்களின் பிரார்த்தனையை செவியுற்று அவற்றை ஏற்றுக் கொள்பவன்.

''மேலும் (நபியே) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால்,நிச்சயமாக நான் (அவர்களுக்கு)அருகிலேயே இருக்கிறேன்,என்னை எவரேனும் அழைத்தால்,அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்''(2:186)

''அவனிடமே மன்னிப்பு கேளுங்கள்;பின்னர் அவன் பக்கம் நீங்கள் மீளுங்கள்!திண்ணமாக,என் இறைவன் அருகில் இருக்கிறான்.(பிராத்தனைகளுக்கு)பதிலளிப்பவனாக இருக்கிறான்''(11:61)

54)அல் வகீல்;
மக்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கப் பொறுப்பேற்றவன்.

''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்.அவனே சிறந்த பாதுகாவலன்''(3:173)

55)அல் ஹஸீப்;
மக்களின் நன்மை-தீமை குறித்து விசாரிப்பவன்!


''திண்ணமாக,அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கிறான் ''(4:86)  


56)அல் ஜாமி;
மனிதனின் மரணத்திற்குப் பின் அவனுடைய உடலைச் சேகரித்து,உயிரூட்டி எழுப்புபவன்! 

''திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒரு நாளில் ஒன்று திரட்டக் கூடியவனாய் இருக்கின்றாய் ''(3:9)


57)அல் காதிர்;
அனைத்து விஷயங்களிலும் ஆற்றலுடையவன்!

''அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் கருதி கொண்டு இருக்கிறானா? நாமோ அவனுடைய விரல் நுனியைக் கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்''(75:3,4)

58)அல் ஹஃபீஸ்;
மக்களை ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுபவன்!  

''உறுதியாக என் இறைவன் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்''(11:57)

59)அல் முகீத்;
அனைவருக்கும் அவரவருக்குரிய பாகத்தை சரியாக வழங்கிக் கண்காணிப்பவன்! வாழ்வை வழங்குபவன்!

''மேலும்,அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்''(4:85)

60)அல் வதூத்;
மக்கள் மீது நிகரற்ற அன்பு கொண்டவன்!

61)அல் மஜீத் ;
கண்ணியம் வாய்ந்தவன்!

''மேலும்,அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும்,அன்பு செலுத்துபவனாகவும் இருக்கிறான்.அர்ஷின் உரிமையாளனாகவும் மேன்மை,மிக்கவனாகவும் (இருக்கிறான்) (85:14,15)

62)அஷ் ஷஹீத்;
ஒவ்வொரு இடத்தையும்,ஒவ்வொரு பொருளையும் தன் பார்வையில் வைப்பவன்!

''மேலும்,அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்'' (85:9)

63)அல் வாரிஸ்;
யாவற்றிற்கும் முடிவில்லாத உரிமையாளன்!

64) அல் முஹ்பீஈ;
இறந்தவர்களை உயிர்ப்பிப்பவன்!

''திண்ணமாக வாழ்வையும் மரணத்தையும் நாமே அளிக்கிறோம்.மேலும்,அனைத்துக்கும் நாமே வாரிசாவோம்''(15:23)

65) அல் வலீ;
இறைநம்பிக்கையாளர்களின் ஆதரவாளன்; உதவி புரிபவன்!

66)அல் ஃபாதிர்;
ஒவ்வொருவரையும் முன்னுதாரணமின்றி படைத்தவன்!   

''வானங்களையும் பூமியையும் படைத்தவனே!நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன்''(12:101)

67)அல் மாலிக்;
உண்மையான எஜமானன்;அவன் முன்னிலையில் அனைவரும் யாசிப்பவரே!

''இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் (அல்லாஹ்வே) இருக்கிறான்'' (1:3)

68)அல் முக்ததிர்;
ஒவ்வொன்றின் மீதும் முழு ஆதிக்கம் செலுத்தக் கூடியவன்! எதுவொன்றும் அவனுக்கு இயலாத ஒன்றல்ல!

69)அல் மலீக்;
அனைவரையும் அடக்கி ஆளும் முழுமையான அதிகாரம் கொண்ட மன்னன்!

''சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத் துணியால் ஆனவையாகும்.மேலும்,இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்து விட்டிருக்கும்.உங்கள் அதிபதியின் எந்தெந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்'' (55:54,55)

70)அல் அவ்வல்;
அனைத்துப் படைப்பினங்களின் உருவாக்கத்திற்கும் முன்பே இருந்தவன்!

71)அல் ஆகிர்;
அனைத்துப் படைப்பினங்களும் அழிக்கப்பட்டதன் பின்பும் என்றும் இருப்பவன்!

72)அள் ளாஹிர;
அனைத்து குறைகளை விட்டும் தூய்மையானவன்;ஒவ்வொரு அணுவிலிருந்தும் வெளிப்படக் கூடிய இறையாண்மை கொண்டவன்!

73)அல் பாதின்;
பார்வைகளை விட்டும் மறைந்திருப்பவன்!

''அவனே ஆதியும் அந்தமும் ஆவான்.அவனே வெளிப்படையானவனும்,மறைவானவனும் ஆவான் .மேலும்,அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாக இருக்கிறான்''(57:3)

74)அல் காஹிர்;
மக்கள் மீது முழுமையான அதிகாரம் செலுத்தும் வல்லமை உள்ளவன்!

''அவன் தன் அடிமைகள் மீது முழு அதிகாரமுடையவன்''(6:18)

75)அல் காஃபீ;
மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானவன்!

''(நபியே) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவன் இல்லையா,என்ன? '' (39:36)
திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.

சகோதரி.
ஆயிஷா பேகம்.
         

       
      

              

Monday 6 February 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!


ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


26)அல் கதீர்:
ஒவ்வொரு பொருளின் மீதும் முழு ஆற்றல் கொண்டவன்.மேலும்,அதிகாரம் கொண்டவன்.  


''அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கிறான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ''(65:12)


27)அல் ஹலீம் ;
தண்டிப்பதில் அவசரப்படாதவன்.மக்கள் திருந்த வாக்களிப்பவன் மேலும்,சகிப்புத் தன்மை கொண்டவன். 


28)அல் கஃபூர்:
மக்களை அதிகமதிகம் மன்னிப்பவன் :அவர்களுடைய பாவங்களைத் திரையிட்டு மறைப்பவன்!


29)அல் அஃபூவ்:
மிக அதிகமாக மன்னிப்பவன்!


30)அஷ் ஷகூர்:
மக்களின் நற்செயல்களை மிகவும் மதிப்பவன்!


''உண்மையில்,அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் விலகி விடாமல் தடுத்து வைத்திருக்கிறான்.அப்படி அவை விலகி விட்டால்,அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றைத் தடுத்து நிறுத்துவோர் யாரும் இல்லை.திண்ணமாக,அல்லாஹ் மிகவும் சகிப்புத்தன்மையுடையவனும் பெரிதும் மன்னிப்பவனும் ஆவான் ''(35:41)


''அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக் கூடும்.அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும்,மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்''(4:99)


''நம்மை விட்டுக் கவலையை அகற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி!திண்ணமாக,நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பவனாகவும்,உரிய மதிப்பை அளிப்பவனாகவும் இருக்கிறான்''(35:34)
  
31)  அல் அஜீம்:
தனது தன்மையில் மிக்க உயந்தவன் ;மாட்சிமை  மிக்கவன் மகத்தானவன் .

''எனவே (நபியே) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக''(56:74)

32)அல் வஸீ:

மிகவும் விசாலமானவன்:மக்களுக்கு பரந்த மனதுடன் வாரி வழங்குபவன்!

''அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட்செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கிறான்.அல்லாஹ் விசாலமான கொடையாளனும்  எல்லாம் அறிந்தவனுமாவான் .தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான்.எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ,அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப் பட்டவராவார்''(2:267,268)

33) அல் ஹகீம்:
அகிலங்களை நிர்வகிப்பவன்.மேலும்,மக்கள் விஷயங்களில் சிறந்த அறிவுக் கூர்மையுடன் தீர்ப்பு வழங்குபவன்.

''மேலும் நீங்கள் விரும்புவதால்,எதுவும் நடக்கப் போவதில்லை;அல்லாஹ் நாடினால்,அன்றி!திண்ணமாக, பேரறிவாளனாகவும்,நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.தான் நாடுவோரைத் தனது கருணையில் நுழையச் செய்கிறான்.மேலும்,கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை தயார் செய்து வைத்திருக்கிறான்''(76:30,31)
         

34) அல் ஹய்யு:
வாழ்வின் தோற்றுவாய்;மரணம்,உறக்கம்,சிற்றுறக்கம் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவன்.

''மேலும் (நபியே) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒரு போதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதும் சார்ந்திருப்பீராக ''(25:58)

35)அல் கய்யூம் ;
அகிலத்தை நிர்வகிப்பவன் ;என்றென்றும் நிலையானவன் !


''அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும் )நன்கு நிர்வகிப்பவன்;அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை!அவன் தூங்குவதுமில்லை;மேலும்,சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை''(2:255)

36)  அஸ் ஸமீ :
மக்களின் பிராத்தனைகளைச் செவியுறுபவன்;மக்களின் நிலையை நன்கு அறிந்தவன்!


37) அல் பஸீர்;
மக்களின் செயல்பாடுகளை உற்று நோக்குபவன்;அவர்களிடையே நீதமாக தீர்ப்பு வழங்குபவன்!


''மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான்.ஆனால்,அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணை வைப்பாளர்கள் )அழைக்கின்றார்களோ,அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக் கூடியவர்களல்லர்! ஐயமின்றி,அல்லாஹ் தான்,அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்''(40:20)


38)அல் அத்தீஃப்:
மிக நுட்பமாகப் பார்ப்பவன்;நுட்பமான முயற்சிகள் மேற்கொள்பவன்!


39)அல் க(ஹ்)பீர் ;
மக்களின் ஒவ்வொரு அசைவையும் நன்கறிந்தவன்!


''(மேலும்,லுக்மான் கூறினார்)''என் அருமை மகனே!ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி,அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான்.அவன் நுன்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான் ''(31:16)


40)அல் அலீ;
பெருமதிப்பு மிக்கவன்.


41) அல் கபீர்;
மிகவும் உயர்ந்தவன்;மேலானவன்;யாருக்கும் இணையோ ஒப்புவமையோ இல்லாதவன்!


42) அல் ஹக் ;
அவன் இருப்பது முற்றிலும் உண்மையானது!அவனை நிராகரிப்பதால்,தனது நிலையில் எத்தகைய பாதிப்பும் இல்லாதவன்!


''இவற்றிற்குக் காரணம் அல்லாஹ் தான் சத்தியமானவன் என்பதும் அவனைத்தவிர இவர்கள் வணங்குபவை அனைத்தும் அசத்தியமானவை,மேலும் அல்லாஹ்வே உயர்ந்தவனாகவும் மேலானவனாகவும் இருக்கிறான் என்பதுமேயாகும் ''(31:30)



43)அல் முபீன் ;
சத்தியத்தை வெளிப்படுத்துபவன்;சத்தியத்தை உண்மையென்று எடுத்துரைப்பவன்.


''மேலும்,அவர்களுக்குத் தெரிந்து விடும்;அல்லாஹ் தான் உண்மையானவன்;உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன் என்று''(24:25)


44) அல் மவ்லா;
செயல்களை நிறைவேற்றுபவன்;இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவான எஜமான்!


45) அல் நஸீர்;
மூமின்கள் -இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிபவன்!


''மேலும்,அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.அவன் தான் உங்களுடைய பாதுகாவலன்.அவன் எத்துணை சிறந்த பாதுகாவலன்;மேலும்,அவன் எத்துணை சிறந்த உதவியாளன் ''(22:78)


''இதற்குக் காரணம்,நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாகவும்,உதவி புரிபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான் என்பதே!மேலும் நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலனும் உதவியாளனும் எவரும் இல்லை''(47:11)



திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.

சகோதரி.
ஆயிஷா பேகம்.



     
   



                  



         
Related Posts Plugin for WordPress, Blogger...