Wednesday, 8 February 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!

ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


46)அல் கரீம்;
அருட்கொடையாளன்;விசால மனம் படைத்தவன்;விசால குணத்துடன் மக்களை அதிகமதிகம் மன்னிப்பவன்!நல்ல முறையில் நடத்துபவன்!

''மனிதனே!அருட்கொடையாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?அவனே,உன்னைப் படைத்தான்;உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்.மேலும்,தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான் ''(82:6-8)

47) அல் கனீ;
படைப்பினங்களின் பால் தேவையற்றவன்!

48)அல் ஹமீத் ;
புகழுக்குரியவன்,படைப்பினங்கள் அவனை புகழ்வதை விட்டும் தேவையற்றவன்!

''யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயணிக்கும்.யாரேனும்,நன்றி கொன்றால்-உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்''(31:12)

49)அல் கவிய்யு;
பெரும் வல்லமை கொண்டவன்;அவன் முன் எவருடைய வலிமையையும் எடுபடாது!

50)அஷ் ஷதீத் ;
கடுமையாகப் பிடிப்பவன்.அவனுடைய பிடியிலிருந்து தப்ப முடியாது!

''ஃ பிர்அவ்னை சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல் தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள்!எனவே,அவர்களுடைய பாவங்களின் காரணத்தால்,அல்லாஹ் அவர்களைப் பிடித்து கொண்டான்.(உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கிறான்''(3:11)

 51)அர் ரகீப் ;
மக்களின் செயல்பாடுகளையும்,விவகாரங்களையும் எப்போதும் கண்காணிப்பவன்!

''திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்.அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் ''(4:1)

52)அல் கரீப்;
மக்களுக்கு மிக அருகில் உள்ளவன்.

53)அல் முஜீப்;
மக்களின் பிரார்த்தனையை செவியுற்று அவற்றை ஏற்றுக் கொள்பவன்.

''மேலும் (நபியே) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால்,நிச்சயமாக நான் (அவர்களுக்கு)அருகிலேயே இருக்கிறேன்,என்னை எவரேனும் அழைத்தால்,அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்''(2:186)

''அவனிடமே மன்னிப்பு கேளுங்கள்;பின்னர் அவன் பக்கம் நீங்கள் மீளுங்கள்!திண்ணமாக,என் இறைவன் அருகில் இருக்கிறான்.(பிராத்தனைகளுக்கு)பதிலளிப்பவனாக இருக்கிறான்''(11:61)

54)அல் வகீல்;
மக்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கப் பொறுப்பேற்றவன்.

''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்.அவனே சிறந்த பாதுகாவலன்''(3:173)

55)அல் ஹஸீப்;
மக்களின் நன்மை-தீமை குறித்து விசாரிப்பவன்!


''திண்ணமாக,அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கிறான் ''(4:86)  


56)அல் ஜாமி;
மனிதனின் மரணத்திற்குப் பின் அவனுடைய உடலைச் சேகரித்து,உயிரூட்டி எழுப்புபவன்! 

''திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒரு நாளில் ஒன்று திரட்டக் கூடியவனாய் இருக்கின்றாய் ''(3:9)


57)அல் காதிர்;
அனைத்து விஷயங்களிலும் ஆற்றலுடையவன்!

''அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் கருதி கொண்டு இருக்கிறானா? நாமோ அவனுடைய விரல் நுனியைக் கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்''(75:3,4)

58)அல் ஹஃபீஸ்;
மக்களை ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுபவன்!  

''உறுதியாக என் இறைவன் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்''(11:57)

59)அல் முகீத்;
அனைவருக்கும் அவரவருக்குரிய பாகத்தை சரியாக வழங்கிக் கண்காணிப்பவன்! வாழ்வை வழங்குபவன்!

''மேலும்,அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்''(4:85)

60)அல் வதூத்;
மக்கள் மீது நிகரற்ற அன்பு கொண்டவன்!

61)அல் மஜீத் ;
கண்ணியம் வாய்ந்தவன்!

''மேலும்,அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும்,அன்பு செலுத்துபவனாகவும் இருக்கிறான்.அர்ஷின் உரிமையாளனாகவும் மேன்மை,மிக்கவனாகவும் (இருக்கிறான்) (85:14,15)

62)அஷ் ஷஹீத்;
ஒவ்வொரு இடத்தையும்,ஒவ்வொரு பொருளையும் தன் பார்வையில் வைப்பவன்!

''மேலும்,அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்'' (85:9)

63)அல் வாரிஸ்;
யாவற்றிற்கும் முடிவில்லாத உரிமையாளன்!

64) அல் முஹ்பீஈ;
இறந்தவர்களை உயிர்ப்பிப்பவன்!

''திண்ணமாக வாழ்வையும் மரணத்தையும் நாமே அளிக்கிறோம்.மேலும்,அனைத்துக்கும் நாமே வாரிசாவோம்''(15:23)

65) அல் வலீ;
இறைநம்பிக்கையாளர்களின் ஆதரவாளன்; உதவி புரிபவன்!

66)அல் ஃபாதிர்;
ஒவ்வொருவரையும் முன்னுதாரணமின்றி படைத்தவன்!   

''வானங்களையும் பூமியையும் படைத்தவனே!நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன்''(12:101)

67)அல் மாலிக்;
உண்மையான எஜமானன்;அவன் முன்னிலையில் அனைவரும் யாசிப்பவரே!

''இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் (அல்லாஹ்வே) இருக்கிறான்'' (1:3)

68)அல் முக்ததிர்;
ஒவ்வொன்றின் மீதும் முழு ஆதிக்கம் செலுத்தக் கூடியவன்! எதுவொன்றும் அவனுக்கு இயலாத ஒன்றல்ல!

69)அல் மலீக்;
அனைவரையும் அடக்கி ஆளும் முழுமையான அதிகாரம் கொண்ட மன்னன்!

''சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத் துணியால் ஆனவையாகும்.மேலும்,இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்து விட்டிருக்கும்.உங்கள் அதிபதியின் எந்தெந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்'' (55:54,55)

70)அல் அவ்வல்;
அனைத்துப் படைப்பினங்களின் உருவாக்கத்திற்கும் முன்பே இருந்தவன்!

71)அல் ஆகிர்;
அனைத்துப் படைப்பினங்களும் அழிக்கப்பட்டதன் பின்பும் என்றும் இருப்பவன்!

72)அள் ளாஹிர;
அனைத்து குறைகளை விட்டும் தூய்மையானவன்;ஒவ்வொரு அணுவிலிருந்தும் வெளிப்படக் கூடிய இறையாண்மை கொண்டவன்!

73)அல் பாதின்;
பார்வைகளை விட்டும் மறைந்திருப்பவன்!

''அவனே ஆதியும் அந்தமும் ஆவான்.அவனே வெளிப்படையானவனும்,மறைவானவனும் ஆவான் .மேலும்,அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாக இருக்கிறான்''(57:3)

74)அல் காஹிர்;
மக்கள் மீது முழுமையான அதிகாரம் செலுத்தும் வல்லமை உள்ளவன்!

''அவன் தன் அடிமைகள் மீது முழு அதிகாரமுடையவன்''(6:18)

75)அல் காஃபீ;
மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானவன்!

''(நபியே) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவன் இல்லையா,என்ன? '' (39:36)
திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.

சகோதரி.
ஆயிஷா பேகம்.
         

       
      

              

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...