Wednesday 25 January 2012

நமக்கு உரிமை இருக்கா ...?

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
சமீப காலங்களில் அதிக அளவு தற்கொலை பற்றி கேள்விப்படுகிறோம் அதுவும், தான் மட்டும் சாகாமல் தான் இறந்து விட்டால் தன் மனைவி குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற, நல்ல எண்ணத்தில் ..?அவர்களுக்கும் விஷம் கொடுத்து சாகடிப்பது அதிகளவு இருக்கிறது .ஒரு வேளை ஊடகங்களில் உதவியால் நமக்கு உடனே தெரிவது கூட காரணமாக இருக்கலாம் .இருந்தாலும் வருட வருடம் தற்கொலை பற்றிய கணக்கெடுப்பில் தற்கொலை செய்பவர்களின்  எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறைவது போல தெரிய வில்லை.

தற்கொலை செய்வதற்கு காரணம் என்னமோ வேறுவேறாக இருக்கலாம்..! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்..! ஆனால் அவர்கள் அனைவரும்  போகும் இடம் என்னவோ நரகம் தான்..  மிக எளிதாக எந்த கஷ்டமும்  இல்லாமல், அவர்கள் எத்தனை நல்அமல்கள் செய்து இருந்தாலும் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு கிடைத்து விடும்.


உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  (அல்குர்ஆன் 2:195)


சோதனை மேல சோதனை வாழ ஒரு வழியும் தெரியல இருந்து என்ன செய்ய அதுக்கு சாவது மேல் என்றால் இந்த உலகத்தில் முக்கால் வாசி பேர் இல்லாமல் போய் இருப்பார்கள். யாருக்கு கஷ்டம் இல்லை.?நம்மை விட மேலாக இருப்பவர்களில் இருந்து நம்மை விடக் கீழே இருப்பவர்கள் வரை அவரவருக்கு ஏற்றார் போல் கஷ்டங்கள் உண்டு. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை..ஒரே இன்பமாக இருந்தால் நமக்கும் தான் வாழ்க்கை சலித்து விடாதா..?குறை இருக்கும் இடத்தில் தானே தேடல் இருக்கும்.வாழ்வின் தேடல் தானே நம்மை உயிர்ப்புடன் செயல் பட வைக்கிறது. 

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2-155)

பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10) 

முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?
(அல் குர்ஆன் 29:2)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புஹாரி-5645

நமக்கு கிடைக்கும் துன்பம் கூட இரண்டு வகையில் இருக்கும்.நாமாக வரவழைத்துக் கொள்ளும் துன்பம் ஒன்று. தானாக வரும் துன்பம் ஒன்று படிக்கும் காலத்தில் படிக்காமல் வீணாக பொழுதைப் போக்கி விட்டு பரீட்சை சமயத்தில் தோல்வி அடைந்ததும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது முதல் வகை .இதில் முழுக் குற்றவாளி நாம் தாம் இரண்டாவது வகை எதிர்பாராமல் புயல்,மழை,விபத்து,போன்றவற்றால் நஷ்டம் ஏற்படுவது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை .இந்த சமயத்தில் தான் நாம் விதியை நம்ப வேண்டும்..
நம்மை மீறி சொல்ல முடியாத  துன்பம் வரும் போது நம் துன்பம் எல்லாம் நம் விதி படி தான் நடக்கிறது என்று விதியின் பெயரைச் சொல்லி அதன் மீது பழியை போட்டு விட்டு  சமாதானம் செய்து கொள்ள வேண்டும். விதியை நம்புவது நம் ஒவ்வொருவருக்கும் ஆகுமானதாகும் பாரதூரமான துன்பம் வந்தால் அதை தாங்கி கொள்ளக் கூடிய  மன வலிமையை விதி நமக்கு அளிக்கிறது ..

இந்தப் பூமியிலோ,  உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (57 : 22)

இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அனைவரும்,என்னை ஏன் இப்படி சோதிக்கிற இறைவா,இதுக்கு நீ என்ன படைக்காமலே இருந்திருக்கலாமே,எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ,இந்த மாதிரி கஷ்டபடுறதுக்கு பதிலா போய் சேரலாம்,இவைகள்  நாம் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது நினைக்கும் வசனங்கள்.!இந்த உலகத்தில் நாம் மட்டும் தான் கஷ்ட படுவது போலவும் மற்றவர்களுக்கு அந்த அளவு துன்பம் இல்லை என்றும் நம் அனைவருக்கும் நினைப்பு ..!

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி – 5641

நம் வாழ்க்கையே சொர்க்கம், நரகம் என்ற இரண்டை வைத்து தான் வலியுறுத்தப் பட்டு இருக்கிறது ..இதைத் தான் குரானும் நபி (ஸல் அவர்களில் வாழ்வும் நமக்கு சொல்லி கொடுக்கிறது.நம் அனைவரின் எண்ணமும் குறிக்கோளும் மறுமை எனும்நிரந்தரமான வாழ்க்கையில் சொர்க்கத்தை அடைவது தான்..!அதை நோக்கியே  நம் எல்லா இபாதத்துக்களும் நல் அமல்களும்,இன்ன பிற நல்ல செயல்களும்.

பெரும் பாவங்களை தவிர  நாம் அறிந்தோ அறியாமலோசெய்கின்றஅடுத்தவர்களை பாதிக்காத தவறுகளுக்கு அல்லாஹ் மன்னிப்பு உண்டு என்கிறான்.மனிதன் பலகீனமானவன் என்றும் அவன் செய்யும் தவறுகளுக்கு பாவ மன்னிப்பு கேட்டால் நான் அதை வழங்குவேன் என்றும் உறுதி கூறுகிறான்

(நபியே!) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான்’(39:52) 


ஆனால் என்றும் மன்னிப்பு கிடைக்காத பாவங்களில் தற்கொலையும் ஒன்று ..

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்.  எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்  எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)நூல்:  புஹாரி-1364

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்:  புஹாரி 6606

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்ட ஒருவரின் கேள்வி..  என் உடம்பு  இது ..! இதை நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள எனக்கு உரிமை இருக்கு இது குறித்து நீங்கள் என்ன கேட்பது என்று ..!உண்மையில் நம் உடம்பை நாம்என்ன வேண்டுமானாலும்செய்துகொள்ளஉரிமை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .அப்படி இருந்திருந்தால் அல்லாஹ் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிருப்பான்.உங்கள் கைகளால் உங்களுக்கு அழிவை தேடிக் கொள்ளாதீர்கள் என சொல்லி இருக்க மாட்டான்.

நம் உடம்பு இறைவனின் அமானிதம் ஆகும். நமக்குக் கிடைக்கும் அன்பளிப்பை தான், நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதி இருக்கிறது அமானிதப் பொருளுக்கு.அந்த உரிமை இல்லை .. ஒரு அமானிதப் பொருளை உரியவர் வந்து கேட்கும் வரை எப்படிப் பாதுகாத்து வைத்திருப்போமோ அப்படித் தான் நம் உடலையும் நல்ல முறையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். நம் உடலை வைத்து மார்க்கம் சொன்ன விதத்தில் நல் அமல்களைச் செய்ய மட்டுமே நமக்கு அனுமதி உண்டு. கொடுத்தவன் எப்போது விருப்பப் படுகிறானோ அப்போது அவனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் கொண்டு போய் விடுவான் ..
இதில் நம் விருப்பம் ஒன்றும் இல்லை ..

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156) 


எனவே நமக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும்  தற்கொலை என்ற எண்ணத்தை கைவிட்டு எந்தத்  துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கு என்ற  வாக்கினை நினைவு கூர்ந்து நம்பிக்கையோடு அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்து மீள வேண்டும் ..

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!” (அல்-குர்ஆன் 13:28)


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி துன்பத்தைத் தாங்கக்கூடிய வலிமையை தந்து அருள்வானாக .ஆமீன் .


சகோதரி.
ஆயிஷா பேகம்.
Saturday 21 January 2012

மகிழ்ச்சி...!

மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது.அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?''என்று கேட்டார்.எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி.நான் முதலில் என்ன சொன்னேன்?பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்?ஒவ்வொருவரும்  அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!''என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார்,''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக்  கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''

நபரை அல்ல...!

செயலைக் கண்டியுங்கள்,நபரை அல்ல.

விரும்பத்தகாத் செயல்களைப் பிறர் செய்யும் போது நமக்கு கோபம் வருகிறது.சிலர் பண்பு கருதி,நபரைக் கருதி,சூழ்நிலை கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.சிலரால் இது முடிவதில்லை.காச் மூச் என்று கத்துகிறார்கள்.
''டேய்,உனக்கு அறிவிருக்குதா?''என்று கேட்பதை விட,'ஒரு புத்திசாலி செய்யக் கூடிய காரியமா இது?'என்று கேட்டுப் பாருங்கள்.நல்ல பலனிருக்கும்.செயல் தான் கண்டிக்கப் பட வேண்டும்.நபர்கள் அல்ல.இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.
*நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
*நாம் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று நாம் பின்னால் வருத்தப் பட வேண்டிய சூழ் நிலை வராது.
*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

முழுமை..!

முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை  விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.

மன அமைதி...!

முதுகிற்குப்பின் யார்தான் பேசவில்லை?எல்லோரும் நம்மைப் பற்றி சிறிதளவேனும் மனக் குறைவோடு குறிப்பிடவே செய்கிறார்கள்


நம் அன்பிற்குரியவர்கள்,மரியாதைக்குரியவர்கள்,நம்மை நம்பி வாழ்பவர்கள்,நம் தயவை நாடுபவர்கள் கூட இதற்கு விதி  விலக்காக இருக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி இரண்டாவது கருத்து இருக்கத்தான் செய்கிறது.சிலர் அதை நம் காதுக்கு எட்டும்படி பேசுகிறார்கள்:சிலர் அதை சாமர்த்தியமாகக் கடைசி வரை மறைத்தே வருகிறார்கள்.


இந்த உண்மையை நெஞ்சில் நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக ஏதும் பேசியதாகக் கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியோ,வருத்தமோ,கோபமோ வராது.நம்மைப்  பற்றி ஒருவர் மனக் குறையுடன் பேசியதாகக் கேள்விப்பட்டால்,அவருடன் சண்டை போடுவதற்குப் பதில் அவர் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் ஏற்கனவே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல்  ஏன் அப்படி நேர்ந்தது என்று மிக இயல்பாக விளக்கிக் கூறினால் அவர் சரணாகதி அடைய மாட்டாரா?


பல மனிதர்களுக்கு தீர்மானமான தெளிவான கருத்து இருப்பதில்லை. நேரத்திற்கு ஒன்றைப் பேசுவது,தோன்றியதைஎல்லாம் சொல்வது என்று வைத்திருக்கிறார்கள்.எனவே இவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வருந்தவோ,கவலைப்படுவதோ வேண்டியதில்லை.


முதுகிற்குப் பின்னால் பேசுவது என்பது மனிதனின் தலையாய பலவீனம்.இதற்குக் காரணம் இருக்கிறது.பாராட்டைத் தவிர முகத்திற்கு நேரே சொல்லப்படும் எந்தக் கருத்தையும் நாம் விரும்புவதில்லை.அப்புறம் முதுகிற்குப் பின்னால் பேசாமல் எப்படி இருப்பார்கள்?மனிதர்களால் மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.


இதில் இடைப்பட்டவர்கள் செய்யும் கெடுதலும் உண்டு.வேண்டுமென்றே வார்த்தைகளையும்,தொனியையும்,தோரணையையும் மாற்றி பெரிது படுத்தி விடுவார்கள்.


நம்மைப் பற்றிச் சொல்லப்படும் விசயங்களில் உள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ளவும் ,உண்மை யற்றவைகளைப் புறக்கணிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இதற்கெல்லாம் மன அமைதியை கெடுத்துக் கொள்ளக் கூடாது.--லேனா தமிழ்வாணன்.

Wednesday 11 January 2012

தாய்பாலின் மகத்துவம் ..!


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
இன்று நிறைய பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.ஒரு சில பெண்களைத் தவிர..
  •  மற்றப் பெண்களுக்கு வேலைக்கு போவது ஒரு காரணமாக இருக்கலாம் அவர்களின் எண்ணமும்..
  • பாலில் என்ன வந்தது டாக்டர் சொல்லும் புட்டிப் பாலை வாங்கி கொடுத்தால் போதும் என நினைக்கின்றனர்.. ஆனால் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும், புட்டிப் பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும் அறிவுத் திறனில் வித்தியாசம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் பிள்ளைக்கு ஒவ்வாமை ,வலிப்பு போன்ற பிற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு..

தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் 
அபரிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் எளிதில் செரிமானமாகக் கூடியத் தன்மையும் இருக்கிறது நாம் புட்டிப் பாலை  என்ன தான் விலை கொடுத்து வாங்கினாலும் இதற்கு ஈடு வராது.'.இது 'அல்லாஹ்வின் அருட் கொடையாகும் '

மேலும் பாலூட்டும் தாய்க்கு கர்ப்பப்பை புற்று நோய் ,மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் பெருமளவு குறைகின்றன .தாய்க்கும் குழந்தைக்கும் உன்னதமான உறவு ஏற்படுகிறது .

ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.இது ஒவ்வொரு தாயின் கடமை.இந்த காலகட்டத்தில் வேலைக்கு போகாமல் இருப்பதே நல்லது..

ஆனால் எனக்கு பொருளாதாரப் பிரச்னை போய் தான் ஆக வேண்டும் என்றால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில அனுமதி பெற்று தகுந்த இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க முயற்சி எடுங்கள் அது தான் இருவருக்கும் நல்லது..

நம் மார்க்கத்தில் திருமறையின் கூற்று 
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் (குர்ஆன் 2: 233)
  
நம் பொறுப்பை நாம் தட்டிக் கழிக்க முடியாது அதற்கு தகுந்த பதிலை நாம் சொல்லியாக வேண்டும் ..

ஒரு உண்மை சம்பவம் ..

திண்டுக்கல் மாவட்டம் ,தவசிமேடை கிராமத்தை சேர்ந்தவர் நீதிமேரி இவருக்கு கொசவப்பட்டி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ..

தாய்ப்பால் பற்றாக்குறையால் பிறந்ததில் இருந்தே நோய்களின் தாக்கப் பட்டு சாவின் விளிம்புக்கு சென்று விட்டு ..அல்ஹம்துலில்லாஹ் கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றி இருக்கிறது தாய்(களின்) பால்..

ஏழு மாத குழந்தை ஆஷாவுக்கு தாய்ப்பால் போதாதால் ,ஆறாவது நாளில் இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க .கொடுத்த நாப்பத்தி ரெண்டாவது நாளில் ஆரம்பிச்ச வயிற்றுபோக்கு ஆரம்பிச்சுருக்கு ..உடனே திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்க ..ரத்தம் ,குளுகோஸ் ஏற்றியும் ஒன்னும் சரியாகல .

குழந்தையின் நிலைமையைப் பார்த்த மருத்துவர் ஜெயின்லால் கூற்று ..

குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்ததால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட நோய்க்கிருமியோடத் தாக்குதல் அதிகமாகி ரத்தத்தில் கலந்து 'செப்டிமீசியா
ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை.இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல உடம்புல உயிர் ஓட்டிட்டு இருந்தது என்று தான் சொல்லணும் ..

பொதுவா அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது .இந்தக் குழந்தைக்காக வெளியில் இருந்து மருந்துகள் வாங்கிக் குடுத்தோம் ..ஆனாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை .

இறுதியா எங்க டீம் போட்ட மீட்டிங்கில் இரவல் 'தாய்ப் பால் 'கொடுத்துப் பார்க்கலாம் என முடிவு செய்தோம் வார்டில் இருந்த எல்லாத் தாய்மார்களிடம் குழந்தை ஆஷாவோட நிலைமையையும் தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தோம் ..

உடனே எல்லாத் தாய்மார்களும் சந்தோசமாக எடுத்து தர ஆரம்பிச்சாங்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நாலஞ்சு நாளிலேயே குழந்தை தேறிடுச்சு 

பல தாய்மார்களின் மூலமா வைட்டமின் ,புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல..இப்ப முழுசா குணமாகி ஆரோக்கியமா இருக்கு 'என்று சொன்ன மருத்துவர் ஜெயின்லால் நிறைவாகச் சொன்னது ...'இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க் 'னுதான் சொல்லனும்

'அல்ஹம்துலில்லாஹ்' 

இந்த நேரத்தில் குழந்தையைக் காப்பாற்ற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பல .

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, கண்டறிந்துள்ளனர்.

ஒவ்வொரு தாயும் தன குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்தோடும் ,நல்ல அறிவுக் கூர்மையோடும் இருப்பதைத் தான் விரும்புவாள்.அதற்கு தாய்ப்பால் பெருமளவில் உதவுகின்றது என்றால் அது மிகையில்லை ..

பொதுவாக நம் வீடுகளில் தாய்ப்பால் அதிகம் சுரக்க பூண்டு,வெந்தயக்களி.அதிகப் பசும் பால் கொடுப்பது வழமையாக உள்ளது.மதியம் சாப்பிட்டு முடித்ததும் ஒரு வெத்தலையில் கொஞ்சம் ஓமம் கொடுத்து சாப்பிடக் கொடுப்பார்கள் குழந்தைக்கு நல்லது என்று.அப்போது என்ன சொன்னாலும் கேட்போம் குழந்தைக்கு நல்லது என்பதால் ..

நம் அனைவருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் நம்மைக் கண்ணியப்படுத்தும் பிள்ளைச் செல்வங்களை கொடுக்க அல்லாஹ்விடம் துஆ..ஆமின் .. 

சகோதரி
ஆயிஷா பேகம்.Saturday 7 January 2012

அதிக உரிமை யாருக்கு ..?அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மனிதர்களாகிய நாம் அனைவருமே உறவுகளாலும் நட்புகளாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இறைவனால் படைக்கப் பட்டுள்ளோம்.இதில் எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனிடம் கருணை காட்டாதவனுக்கு என்னுடைய கருணை கிடைக்காது என்பது ஏக இறைவனின் வாக்கு .

அதிலும் நம் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிக உரிமை இருப்பதாக நம் மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. ஆனால் பொதுவாக நம் முதல் மனஸ்தாபமே அண்டை வீட்டுக்காரர்களிடம் தான் இருக்கிறது அதுவும் ஆண்களை விட பெண்களிடம் இந்த போக்கு அதிகம் காணபடுவதை நாம்  அதிகளவு நடை முறையில் பார்க்கிறோம் .

அதன் காரணம் என்னமோ பெரிய விசயமாக இருக்காது மிக சின்ன விசயமாக இருக்கும் அதன் பொருட்டு அவர்களிடம் சண்டை .போட்டு அவர்களிடம் பேச மாட்டார்கள்.ஆனால் இதன் காரணமாக  நமக்கு கிடைக்கும் தண்டனையை நினைத்துப் பார்த்தோம் எனில்  கண்டிப்பாக இத்தவறை செய்ய மாட்டோம். தொல்லை தரும் அண்டை வீட்டுக் காரர்களிடமும் பொறுமையாக இருப்போம். அல்லது முயற்சியாவது எடுப்போம் .

பொதுவாக மனிதர்கள் நாம் அனைவரும். குறை உள்ளவர்களே அடுத்தவர்களின் சில குறைகளை மறந்து நிறைகளை மட்டும் பார்க்க பழகி விட்டால் தேவை இல்லாமல் யாரிடமும் சண்டை போட மாட்டோம்.

இதன் அடிப்படையில் நம் உறவு முறைகளில் நம் அண்டை வீட்டார்களிடம் நாம் கொள்ள வேண்டிய உறவு முறைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் திருக்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் நமக்கு அழகாக சொல்லி இருக்கின்றன

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரீ (5187)

ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­லி க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)


அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளி­ருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ர­லி), நூல்: புகாரீ (6016)

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: முஸ்­லிம் (71)

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரீ (2259)

முஸ்­லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (2566)

அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­ம் (4758)

உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்! நீ முஸ்­லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: இப்னுமாஜா (4207)

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப் படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (6019)


'அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்குவாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.            அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)  நூல்: புகாரீ (6014)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை,நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அஹ்மத் (9298)

ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையி­ருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: அஹ்மத் (12575)

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?''என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரியகுற்றம்தான்'' என்று சொல்­விட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ர­லி), நூல்: புகாரீ (4477)

நம் அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் நேசிக்கும் தன்மையையும் .மன்னிக்கும் பண்பையும்  ,தூய்மையான எண்ணங்களையும் நல்ல பொறுமையையும் உதவி செய்யும் மனப்பாண்பையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள்வானாக ..ஆமீன் ..


சகோதரி
ஆயிஷா பேகம்

Wednesday 4 January 2012

துன்புறுத்தும் தண்டனை..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்/ எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கின்றானோ அவன்/ தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டுள்ள நிலையில் அவனைச் சந்திப்பான் என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு/ இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ்/ எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் சத்தியஙகளையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிம் பேசவும் மாட்டான்/ அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்/ அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக/ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைத் தான் இருக்கின்றது என்னும் (3-77) வசனத்தை அருளினான் என்று கூறினார்கள். பிறகு/ அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எஙகளிடம் வந்து/ அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊத்) உஙகளிடம் என்ன பேசினார் என்று கேட்டார்கள். நாஙகள் அவர் (இப்னு மஸ்ஊத் (ரலி)) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர்/ உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது/ ஆகவே/ நாஙகள் அல்லாஹ்வின் தூதரிடம் (எஙகள்) வழக்கத்தைத் தாக்கல் செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்/ நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான்/ அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே/ (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்படமாட்டாரே என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவர் ஒரு செல்வத்தை அடைத்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கின்றாரோ அவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார் என்று கூறினார்கள். பிறகு/ இந்த நபி வாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான் என்று கூறிவிட்டு/ 3-77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள்.
புகாரி-2515-
அபூவாயில் (ரஹ்) 


மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன்,(மக்களின் பயணப்)பாதையில்-தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்ர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன்(ஆட்சித்)தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன், அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு(மக்கள் கடைவீதியில் திரளும் போது)தன் வியாபாரப் பொருளைக் காட்டி, எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக(இதைக் கொள்முதல் செய்யும் போது) நான் இன்ன(அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒரு மனிதர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.
இதைக் கூறி விட்டு,எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ.. என்னும் இந்த(3:77) இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
புகாரி-2358-அபூஹூரைரா(ரலி)
Related Posts Plugin for WordPress, Blogger...