Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Saturday, 21 January 2012

மகிழ்ச்சி...!

மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது.அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?''என்று கேட்டார்.எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி.நான் முதலில் என்ன சொன்னேன்?பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்?ஒவ்வொருவரும்  அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!''என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார்,''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக்  கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''

நபரை அல்ல...!

செயலைக் கண்டியுங்கள்,நபரை அல்ல.

விரும்பத்தகாத் செயல்களைப் பிறர் செய்யும் போது நமக்கு கோபம் வருகிறது.சிலர் பண்பு கருதி,நபரைக் கருதி,சூழ்நிலை கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.சிலரால் இது முடிவதில்லை.காச் மூச் என்று கத்துகிறார்கள்.
''டேய்,உனக்கு அறிவிருக்குதா?''என்று கேட்பதை விட,'ஒரு புத்திசாலி செய்யக் கூடிய காரியமா இது?'என்று கேட்டுப் பாருங்கள்.நல்ல பலனிருக்கும்.செயல் தான் கண்டிக்கப் பட வேண்டும்.நபர்கள் அல்ல.இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.
*நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
*நாம் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று நாம் பின்னால் வருத்தப் பட வேண்டிய சூழ் நிலை வராது.
*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

முழுமை..!

முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை  விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.

மன அமைதி...!

முதுகிற்குப்பின் யார்தான் பேசவில்லை?எல்லோரும் நம்மைப் பற்றி சிறிதளவேனும் மனக் குறைவோடு குறிப்பிடவே செய்கிறார்கள்


நம் அன்பிற்குரியவர்கள்,மரியாதைக்குரியவர்கள்,நம்மை நம்பி வாழ்பவர்கள்,நம் தயவை நாடுபவர்கள் கூட இதற்கு விதி  விலக்காக இருக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி இரண்டாவது கருத்து இருக்கத்தான் செய்கிறது.சிலர் அதை நம் காதுக்கு எட்டும்படி பேசுகிறார்கள்:சிலர் அதை சாமர்த்தியமாகக் கடைசி வரை மறைத்தே வருகிறார்கள்.


இந்த உண்மையை நெஞ்சில் நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக ஏதும் பேசியதாகக் கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியோ,வருத்தமோ,கோபமோ வராது.நம்மைப்  பற்றி ஒருவர் மனக் குறையுடன் பேசியதாகக் கேள்விப்பட்டால்,அவருடன் சண்டை போடுவதற்குப் பதில் அவர் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் ஏற்கனவே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல்  ஏன் அப்படி நேர்ந்தது என்று மிக இயல்பாக விளக்கிக் கூறினால் அவர் சரணாகதி அடைய மாட்டாரா?


பல மனிதர்களுக்கு தீர்மானமான தெளிவான கருத்து இருப்பதில்லை. நேரத்திற்கு ஒன்றைப் பேசுவது,தோன்றியதைஎல்லாம் சொல்வது என்று வைத்திருக்கிறார்கள்.எனவே இவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வருந்தவோ,கவலைப்படுவதோ வேண்டியதில்லை.


முதுகிற்குப் பின்னால் பேசுவது என்பது மனிதனின் தலையாய பலவீனம்.இதற்குக் காரணம் இருக்கிறது.பாராட்டைத் தவிர முகத்திற்கு நேரே சொல்லப்படும் எந்தக் கருத்தையும் நாம் விரும்புவதில்லை.அப்புறம் முதுகிற்குப் பின்னால் பேசாமல் எப்படி இருப்பார்கள்?மனிதர்களால் மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.


இதில் இடைப்பட்டவர்கள் செய்யும் கெடுதலும் உண்டு.வேண்டுமென்றே வார்த்தைகளையும்,தொனியையும்,தோரணையையும் மாற்றி பெரிது படுத்தி விடுவார்கள்.


நம்மைப் பற்றிச் சொல்லப்படும் விசயங்களில் உள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ளவும் ,உண்மை யற்றவைகளைப் புறக்கணிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இதற்கெல்லாம் மன அமைதியை கெடுத்துக் கொள்ளக் கூடாது.--லேனா தமிழ்வாணன்.
Related Posts Plugin for WordPress, Blogger...