Thursday, 29 December 2011

இறைவனின் சிரிப்பு..!



அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள்.அதற்க்கு நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள்.

அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல் தான் நீங்கள் உங்களின்இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான்.சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்! அதற்கு அவர்கள் 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம், எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்' என்பார்கள்.பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்.அதற்கு அவர்கள் 'நீயே எங்களின் இறைவன்' என்பார்கள்.


பின்பு அவர்களை இறைவன் அழைப்பான்.நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும்.நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள்.அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன்.அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள்.'இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!' என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும்.

(மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்.நபித்தோழர்கள் 'ஆம்' என்றனர். அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும், என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள்.அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களுள் இருப்பர்.கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.நரக வாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான்.

வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள்.ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்து கரிந்தவர்களாக வெளியேறுவார்கள்.அவர்களின் மீது உயிர்த்தண்ணீர் (மாவுல் ஹயாத்) தெளிக்கப்படும்.ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பாவார்கள். பின்னர்அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.

முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரக வாசிகளில் கடைசியாக இவன் தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் 'இறைவா! என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக! அதனுடைய காற்று என்னை வெளுக்கச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது' என்பான்.அதற்கு இறைவன் 'இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'உன்கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்கமாட்டேன்' என்பான்.

அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதிமொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான்.அவனுடைய முகத்தை நரகத்தை விட்டும் திருப்பி விடுவான்.சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு 'இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன் 'முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி அளிக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அம் மனிதன் 'இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்டும்' என்பான்.அதற்கு இறைவன் 'நீ கேட்டதைக் கொடுத்து விட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா?' என்று கேட்பான். அம்மனிதன் 'கேட்க மாட்டேன். உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்கமாட்டேன்' என்பான்.இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக்கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான்.அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான்.

வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும் மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான் அதன்பின்னர் 'இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக!' என்பான். 'ஆதமுடைய மகனே! ஏன் வாக்குமாறுகிறாய்? முன்பு கொடுத்ததைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி எடுக்க வில்லையா?' என்று இறைவன் கேட்பான்.அதற்கு அம்மனிதன் 'இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக என்னை ஆக்கி விடாதே என்பான்.

இம்மனிதனுடைய நிலை கண்டு இறைவன் சிரிப்பான்.பின்புசுவர்க்கத்தில் நுழைவதற்கு அவனுக்கு இறைவன் அனுமதி அளிப்பான்.அதன்பின்னர் இறைவன் அம்மனிதனை நோக்கி 'நீ விரும்பக் கூடியதையெல்லாம் விரும்பு' என்பான்.அம்மனிதன் விரும்பக்கூடியதை எல்லாம் விரும்புவான். அவன் விருப்பத்தை(க் கூறி)முடித்த பின் இறைவன் அம்மனிதனுக்கு
(அவன் கேட்க மறந்ததையெல்லாம்) நினைவு படுத்தி 'இதை விரும்பு, அதை விரும்பு' என்று (இறைவனே) சொல்லிக் கொடுப்பான். முடிவில்அவனுடைய ஆசைகளைச் சொல்லி முடித்தவின் 'நீ கேட்டதும் அதுபோல் இன்னொரு மடங்கும் உனக்கு உண்டு' என இறைவன் கூறுவான்" என்றார்கள்.

இச்செய்தியை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் அபூஸயீத்(ரலி) உனக்கு நீ கேட்டதும் அது போன்ற பத்து மடங்கும் கிடைக்கும்' என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்று ஆட்சேபித்தார்கள்.

அதற்கு அபூ ஹுரைரா(ரலி) 'ஒரு மடங்கு' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என்றுதான் நினைக்கிறேன் என்றார்கள். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'பத்து மடங்கு' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

நூல் : புகாரி (806).

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...