Monday 6 February 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்..!


ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


26)அல் கதீர்:
ஒவ்வொரு பொருளின் மீதும் முழு ஆற்றல் கொண்டவன்.மேலும்,அதிகாரம் கொண்டவன்.  


''அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கிறான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ''(65:12)


27)அல் ஹலீம் ;
தண்டிப்பதில் அவசரப்படாதவன்.மக்கள் திருந்த வாக்களிப்பவன் மேலும்,சகிப்புத் தன்மை கொண்டவன். 


28)அல் கஃபூர்:
மக்களை அதிகமதிகம் மன்னிப்பவன் :அவர்களுடைய பாவங்களைத் திரையிட்டு மறைப்பவன்!


29)அல் அஃபூவ்:
மிக அதிகமாக மன்னிப்பவன்!


30)அஷ் ஷகூர்:
மக்களின் நற்செயல்களை மிகவும் மதிப்பவன்!


''உண்மையில்,அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் விலகி விடாமல் தடுத்து வைத்திருக்கிறான்.அப்படி அவை விலகி விட்டால்,அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றைத் தடுத்து நிறுத்துவோர் யாரும் இல்லை.திண்ணமாக,அல்லாஹ் மிகவும் சகிப்புத்தன்மையுடையவனும் பெரிதும் மன்னிப்பவனும் ஆவான் ''(35:41)


''அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக் கூடும்.அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும்,மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்''(4:99)


''நம்மை விட்டுக் கவலையை அகற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி!திண்ணமாக,நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பவனாகவும்,உரிய மதிப்பை அளிப்பவனாகவும் இருக்கிறான்''(35:34)
  
31)  அல் அஜீம்:
தனது தன்மையில் மிக்க உயந்தவன் ;மாட்சிமை  மிக்கவன் மகத்தானவன் .

''எனவே (நபியே) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக''(56:74)

32)அல் வஸீ:

மிகவும் விசாலமானவன்:மக்களுக்கு பரந்த மனதுடன் வாரி வழங்குபவன்!

''அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட்செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கிறான்.அல்லாஹ் விசாலமான கொடையாளனும்  எல்லாம் அறிந்தவனுமாவான் .தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான்.எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ,அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப் பட்டவராவார்''(2:267,268)

33) அல் ஹகீம்:
அகிலங்களை நிர்வகிப்பவன்.மேலும்,மக்கள் விஷயங்களில் சிறந்த அறிவுக் கூர்மையுடன் தீர்ப்பு வழங்குபவன்.

''மேலும் நீங்கள் விரும்புவதால்,எதுவும் நடக்கப் போவதில்லை;அல்லாஹ் நாடினால்,அன்றி!திண்ணமாக, பேரறிவாளனாகவும்,நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.தான் நாடுவோரைத் தனது கருணையில் நுழையச் செய்கிறான்.மேலும்,கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை தயார் செய்து வைத்திருக்கிறான்''(76:30,31)
         

34) அல் ஹய்யு:
வாழ்வின் தோற்றுவாய்;மரணம்,உறக்கம்,சிற்றுறக்கம் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவன்.

''மேலும் (நபியே) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒரு போதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதும் சார்ந்திருப்பீராக ''(25:58)

35)அல் கய்யூம் ;
அகிலத்தை நிர்வகிப்பவன் ;என்றென்றும் நிலையானவன் !


''அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும் )நன்கு நிர்வகிப்பவன்;அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை!அவன் தூங்குவதுமில்லை;மேலும்,சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை''(2:255)

36)  அஸ் ஸமீ :
மக்களின் பிராத்தனைகளைச் செவியுறுபவன்;மக்களின் நிலையை நன்கு அறிந்தவன்!


37) அல் பஸீர்;
மக்களின் செயல்பாடுகளை உற்று நோக்குபவன்;அவர்களிடையே நீதமாக தீர்ப்பு வழங்குபவன்!


''மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான்.ஆனால்,அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணை வைப்பாளர்கள் )அழைக்கின்றார்களோ,அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக் கூடியவர்களல்லர்! ஐயமின்றி,அல்லாஹ் தான்,அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்''(40:20)


38)அல் அத்தீஃப்:
மிக நுட்பமாகப் பார்ப்பவன்;நுட்பமான முயற்சிகள் மேற்கொள்பவன்!


39)அல் க(ஹ்)பீர் ;
மக்களின் ஒவ்வொரு அசைவையும் நன்கறிந்தவன்!


''(மேலும்,லுக்மான் கூறினார்)''என் அருமை மகனே!ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி,அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான்.அவன் நுன்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான் ''(31:16)


40)அல் அலீ;
பெருமதிப்பு மிக்கவன்.


41) அல் கபீர்;
மிகவும் உயர்ந்தவன்;மேலானவன்;யாருக்கும் இணையோ ஒப்புவமையோ இல்லாதவன்!


42) அல் ஹக் ;
அவன் இருப்பது முற்றிலும் உண்மையானது!அவனை நிராகரிப்பதால்,தனது நிலையில் எத்தகைய பாதிப்பும் இல்லாதவன்!


''இவற்றிற்குக் காரணம் அல்லாஹ் தான் சத்தியமானவன் என்பதும் அவனைத்தவிர இவர்கள் வணங்குபவை அனைத்தும் அசத்தியமானவை,மேலும் அல்லாஹ்வே உயர்ந்தவனாகவும் மேலானவனாகவும் இருக்கிறான் என்பதுமேயாகும் ''(31:30)



43)அல் முபீன் ;
சத்தியத்தை வெளிப்படுத்துபவன்;சத்தியத்தை உண்மையென்று எடுத்துரைப்பவன்.


''மேலும்,அவர்களுக்குத் தெரிந்து விடும்;அல்லாஹ் தான் உண்மையானவன்;உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன் என்று''(24:25)


44) அல் மவ்லா;
செயல்களை நிறைவேற்றுபவன்;இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவான எஜமான்!


45) அல் நஸீர்;
மூமின்கள் -இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிபவன்!


''மேலும்,அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.அவன் தான் உங்களுடைய பாதுகாவலன்.அவன் எத்துணை சிறந்த பாதுகாவலன்;மேலும்,அவன் எத்துணை சிறந்த உதவியாளன் ''(22:78)


''இதற்குக் காரணம்,நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாகவும்,உதவி புரிபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான் என்பதே!மேலும் நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலனும் உதவியாளனும் எவரும் இல்லை''(47:11)



திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.

சகோதரி.
ஆயிஷா பேகம்.



     
   



                  



         

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...