Thursday 29 December 2011

இறைவனின் சிரிப்பு..!



அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள்.அதற்க்கு நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள்.

அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல் தான் நீங்கள் உங்களின்இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான்.சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்! அதற்கு அவர்கள் 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம், எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்' என்பார்கள்.பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்.அதற்கு அவர்கள் 'நீயே எங்களின் இறைவன்' என்பார்கள்.


பின்பு அவர்களை இறைவன் அழைப்பான்.நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும்.நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள்.அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன்.அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள்.'இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!' என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும்.

(மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்.நபித்தோழர்கள் 'ஆம்' என்றனர். அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும், என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள்.அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களுள் இருப்பர்.கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.நரக வாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான்.

வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள்.ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்து கரிந்தவர்களாக வெளியேறுவார்கள்.அவர்களின் மீது உயிர்த்தண்ணீர் (மாவுல் ஹயாத்) தெளிக்கப்படும்.ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பாவார்கள். பின்னர்அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.

முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரக வாசிகளில் கடைசியாக இவன் தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் 'இறைவா! என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக! அதனுடைய காற்று என்னை வெளுக்கச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது' என்பான்.அதற்கு இறைவன் 'இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'உன்கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்கமாட்டேன்' என்பான்.

அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதிமொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான்.அவனுடைய முகத்தை நரகத்தை விட்டும் திருப்பி விடுவான்.சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு 'இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன் 'முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி அளிக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அம் மனிதன் 'இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்டும்' என்பான்.அதற்கு இறைவன் 'நீ கேட்டதைக் கொடுத்து விட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா?' என்று கேட்பான். அம்மனிதன் 'கேட்க மாட்டேன். உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்கமாட்டேன்' என்பான்.இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக்கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான்.அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான்.

வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும் மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான் அதன்பின்னர் 'இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக!' என்பான். 'ஆதமுடைய மகனே! ஏன் வாக்குமாறுகிறாய்? முன்பு கொடுத்ததைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி எடுக்க வில்லையா?' என்று இறைவன் கேட்பான்.அதற்கு அம்மனிதன் 'இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக என்னை ஆக்கி விடாதே என்பான்.

இம்மனிதனுடைய நிலை கண்டு இறைவன் சிரிப்பான்.பின்புசுவர்க்கத்தில் நுழைவதற்கு அவனுக்கு இறைவன் அனுமதி அளிப்பான்.அதன்பின்னர் இறைவன் அம்மனிதனை நோக்கி 'நீ விரும்பக் கூடியதையெல்லாம் விரும்பு' என்பான்.அம்மனிதன் விரும்பக்கூடியதை எல்லாம் விரும்புவான். அவன் விருப்பத்தை(க் கூறி)முடித்த பின் இறைவன் அம்மனிதனுக்கு
(அவன் கேட்க மறந்ததையெல்லாம்) நினைவு படுத்தி 'இதை விரும்பு, அதை விரும்பு' என்று (இறைவனே) சொல்லிக் கொடுப்பான். முடிவில்அவனுடைய ஆசைகளைச் சொல்லி முடித்தவின் 'நீ கேட்டதும் அதுபோல் இன்னொரு மடங்கும் உனக்கு உண்டு' என இறைவன் கூறுவான்" என்றார்கள்.

இச்செய்தியை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் அபூஸயீத்(ரலி) உனக்கு நீ கேட்டதும் அது போன்ற பத்து மடங்கும் கிடைக்கும்' என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்று ஆட்சேபித்தார்கள்.

அதற்கு அபூ ஹுரைரா(ரலி) 'ஒரு மடங்கு' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என்றுதான் நினைக்கிறேன் என்றார்கள். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'பத்து மடங்கு' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

நூல் : புகாரி (806).

Friday 16 December 2011

வரலாற்றில் ஓர் ஒளி விளக்கு!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)


  அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது மிக பெரிய தொடராக போகும் அத்தனை விவரங்கள் அடங்கியது அவர்களின் வாழ்க்கை வரலாறு .இது அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு..

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.சிறு வயதிலேயே சிறந்த அறிவாளியாகவும்,நல்ல நினைவாற்றல் உள்ளவராகவும் இருந்தார்கள் ..

அன்னையவர்களின் திருமணம் நடந்த போது அவர்களின் வயது '6' திருமணம் என்றால் என்னவென்று தெரியாத விளையாட்டு பருவம்..வயதின் காரணமா அவர்களும் அப்படி தான் இருந்தார்கள்.


அவர்களின் '9'வயதில் தான் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும், மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது .அந்த அறைக்கு  கதவு  துணியால் மூடப்பட்டிருந்தது. அந்த அறையில் உலக வாழ்க்கைக்கு தேவையான ஆடம்பர பொருள்கள் கிடையாது.மறுமை வாழ்வுக்கான பொருள்கள் மட்டுமே இருந்தது .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள்.யார் இல்லை என்று வந்தாலும் தன்னிடம் இருப்பதை. தனக்கு இல்லை என்றாலும் கூட கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.அடுத்தவர்களின் துன்பத்தை கண்டால் கண்ணீர் சிந்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவிகளுக்கு இல்லாத பெருமை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உண்டு.அவர்கள் மட்டும் தான் கன்னி பெண்ணாக மணம் முடிக்கப் பட்டவர்கள். மிகுந்த அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருந்தார்கள் .இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.அன்னையின் மீது மிகுந்தஅன்பும்,பெருமதிப்பும், கொண்டிருந்தார்கள்.எந்த அளவுக்கு என்றால்.எனக்கு முன்னால் உனக்கு மரணம் நேரும் என்றால் நானே உன்னை குளியாட்டி ,கஃபன் இட்டு மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன் என்று சொல்லும் அளவுக்கு...

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு உலகிலேயே மிக பிடித்த பெண் யார் என கேட்டதும் ஆயிஷா (ரலி) என்றார்கள் ஆண் எனக் கேட்டதும் அபுபக்கர் சித்திக் (ரலி) என மறுமொழி பகிர்ந்தார்கள் .ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி இருப்பது .அவர்களின் தியாகத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.


அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு'19' வயது ஆகும் போது சஹாபாக்களில் மறைந்து இருந்த முனாபிக்கான சஹாபாக்களின் மூலமாக அவர்களின் மீது அவதூறு கூறப்பட்டது. அவர்கள் படும் வேதனையின் காரணமாக அவர் பொருட்டு ஏக கருணையாளனாகிய அல்லாஹ் தாலாவால் இறக்கி வைக்கப்பட்டது தான் அல்குரானின் (24:11,24:12,24:13,24:14,24:15,24:16,24:17,24:18,24:19,24:20,24:21)வசனங்கள். இந்த வரலாற்று சம்பவம் உஃபுக் என்று அழைக்கப் படுகிறது .

மேலும் ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் பயணம் மேற் கொள்ளும் போது அவர்களின் கழுத்து மாலை காணாமல் போய்விட்டது அதை தேடும் பொருட்டு அனைவரும் அந்த இடத்திலேயே தங்க நேரிட்டது .தொழுகை நேரம் வந்ததும் தொழுவதற்கு தண்ணீர் தேடினால் அங்கு தண்ணீர் இல்லை .அனைவருக்கும் இவர் பொருட்டு தானே அனைத்தும் என மனங்கள் சுணங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் ஏக கருணையாளனாகிய அல்லாஹ் தாலாவால் தயம்மம் குறித்தான(4:43) வசனங்கள் இறக்கி அருளப் பட்டது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்த காரணத்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு அவர்களுக்கு தோழமையோடு கூடிய நல்ல புரிந்துணர்வு இருந்தது ..இவர்களின் வயது காரணமாக இவர்களின் வேடிக்கை பேச்சுக்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களும் புன்னைகையோடு ஈடு கொடுப்பது உண்டு ..கணவரோடு மிகுந்த அன்போடு ,அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடிய பாக்கியசாலியாக இருந்தார்கள்.

இயல்பாகவே நல்ல அறிவாற்றலும் ,தெளிவான ஞானமும் பெற்று இருந்தாலும், தன் தகப்பனாரின் நல்ல வழிகாட்டுதல் மூலமாகவும் ,சிறு வயதில் இருந்தே இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த காரணத்தாலும் ,தன் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ,ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.

இன்னும் தனிச்சிறப்பாக ஆயிரக்கணக்கான  நபி மொழிகளுக்கு சொந்தக்காரர்களின் முதல் ஏழு நபித் தோழர்களின் வரிசையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் அவர்கள் மூலமாக  நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை (2210 ஹதீஸ்கள்) ஆகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தான் நிகழ்ந்தது .அது குறித்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் மரணித்தது கண்டு நான் பெருமைப்படுகின்றேன், அதனைப் பாக்கியமாகவும் கருதுகின்றேன் என்று பெருமையோடு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னைஆயிஷா (ரலி)அவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு. தனது 66 ம் வயதில் ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.மதீனாவில் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவர்களுக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர். 

அன்னைஆயிஷா (ரலி) அவர்களின் வாழ்வு ,அவர்கள் வாழ்ந்த காலத்திலும் ,நாம் வாழுகின்ற காலத்திலும் இனி மறுமை நாள் வரை வர போகும் அனைத்து பெண்களுக்கும் ஒரு வாழ்வியல் வழிகாட்டியாக உள்ளது  

     அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின்அளவிட முடியாத ஈமான்,கணவர் மீது வைத்திருந்த அளற்ற அன்பு ,ஈகை குணம்,புத்தி கூர்மை ,நேர்மை ,மார்க்கம் பற்றிய தெளிவு ,துணிவு,வீரம் ,சமயோசித அறிவு ஆகிய அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ளும் பாடமாக உள்ளது . எனவே, அவர்களின் நற்பண்புகளை நாமும் பின்பற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஒழுக்கம்  நிறைந்த ஒரு சமூகத்திற்கு வழி வகுப்போமாக.ஆமீன்.

Sunday 11 December 2011

குர்ஆனில் துஆக்கள்!



  إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7

  رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201

  رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250

  سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

 رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8



  رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.

   رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53

  رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147

  رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47

فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101
Related Posts Plugin for WordPress, Blogger...